எனது எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்: வானதி ஸ்ரீனிவாசன்

Published On:

| By Minnambalam Login1

vanathi srinivasan stalin coimbatore

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் இன்று(நவம்பர் 6) முதல்வர் ஸ்டாலினிடம் கோவை சட்டமன்றத் தொகுதியின் தேவைகள் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

கள ஆய்விற்காக கோவை சென்றுள்ள மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் கூறுகையில் “சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு அவர்கள் இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயர் வைக்கப்படும்” என்று ஸ்டாலின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், நிகழ்ச்சி முடிந்த பின்பு ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக நிகழ்ச்சிக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் “ கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அமையவிருக்கிற நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

தொடர்ந்து ஸ்டாலினிடம் வழங்கிய கோரிக்கை மனுவைப் பற்றிக் கூறுகையில் “இன்று முதல்வர் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதில் ஒன்று உப்பிலிப்பாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை செல்லும் உயர்மட்ட சாலை நீலம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்பது. 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நான் முதன் முறை சட்டமன்றத்தில் பேசிய பொழுது, உப்பிலிப்பாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை செல்லும் உயர்மட்ட சாலை நீலம்பூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்திருந்தேன்.

இன்று அதை நீட்டிப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். அதே போல, என்னுடைய தொகுதியில் (கோவை தெற்கு) தங்க நகை தொழிலாளர்கள் அதிகம். நேற்று அவர்களைச் சந்தித்த முதல்வர் இன்று தங்க நகை பூங்காவிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுவும் என்னுடைய கோரிக்கையில் உள்ளது.

மேலும் மற்ற மாநிலங்களில் அமலில் இருக்கும் கைவினை கலைஞர்களுக்கான மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, தமிழ்நாட்டில் அமல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

இதுபோல் சாலை வசதிகள், பாதாளச் சாக்கடைகள் சீரமைக்கப்பட வேண்டும், குப்பைகள் இல்லாத மாநகரமாகக் கோவையை மாற்ற வேண்டும். ஸ்மார்ட் சிட்டியின் கீழ் அமைக்கப்பட்ட குளங்கள் பராமரிக்கப் படவேண்டும்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு ஆவணங்களைத் தமிழக அரசு மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கைகளையும் அவரிடம் கொடுத்தேன்.

இதுமட்டுமல்லாமல் கோவை விமான நிலையத்தை விரிவு படுத்த தேவையான நிலங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

அதற்கு நான், ஒப்படைக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் சிலர், இடத்தை காலி செய்யாமல் இருக்கிறார்கள் என்றேன்.

அதற்கு அவர் இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலினைச் சென்னையில் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் “கோவை விமான நிலைய  விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

மேலும் பாஜக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கவனத்தை ஈர்க்கும் கமலா ஹாரிஸ் இட்லி!

தடைகளை உடைத்து செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார் : ஸ்டாலின்

அமெரிக்க அதிபர் தேர்தல் : விறுவிறுவென முன்னேறும் கமலா… ஆனால்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share