கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று அவர் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. உங்கள் நம்பிக்கையே என் மருந்து.. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன். மீண்டும் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்பு சகோதர சகோதரிகளே, உங்களது அன்பினாலும் பிரார்த்தனையாலும் விரைவாக உடல் நலம் தேறிக் கொண்டிருக்கிறேன். ஒரிரு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் எனக்காக கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
இன்று மாலை 4 மணிக்கு பாரதப் பிரதமர் மோடி பிஜேபியின் ‘பூத் காரியகர்த்தாக்களுடன் கலந்துரையாட உள்ளார். எனது ‘பூத் வலிமையான பூத்’ என்ற கலந்துரையாடலில் நாம் அனைவரும் நமோ ஆப் செயலி மூலம் இணைந்து அவருடன் பேசுவதும், அவர் பேசுவதை கேட்பதுமாக இருந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், தமிழகத்தின் ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலமாக நமது அன்பைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இன்று மாலை 4 மணிக்கு நம் அனைவரும் பிரதமர் மோடிஜியின் பேச்சைக் கேட்கக் காத்திருப்போம்” என்று தெரிவித்தார்.










