மமதா பானர்ஜி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடமும், பழங்குடியின மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் சந்தால் பழங்குடியினரின் 9ஆவது சர்வதேச மாநாட்டில் மாநாடு முதலில் சிலிகுரி அருகே பிதான்நகரில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்ததால், இறுதி நேரத்தில் பக்தோரா விமான நிலையம் அருகே உள்ள சிறிய இடத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் மமதா பானர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் மேற்கு வங்கம் சென்ற குடியரசுத் தலைவரை வரவேற்க செல்லவில்லை. இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதுகுறித்து தனது உரையில் அதிருப்தி தெரிவித்தார். அவர், “மமதா என் தங்கை போன்றவர்… அவர் கோபமாக இருக்கிறாரா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டு, இட மாற்றம் மற்றும் குறைந்த பங்கேற்பு குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், பெரிய இடத்தில் நிகழ்ச்சி நடந்திருந்தால் அதிக மக்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என்றும் கூறினார்.
இதற்கு பதிலடியாக, மமதா பானர்ஜி, குடியரசுத் தலைவர் பாஜகவின் “ஊதுகுழலாக” செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மணிப்பூர் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியினர் மீதான வன்முறைகளுக்கு ஏன் மௌனமாக இருந்தார் என்று கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சி தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், நெறிமுறை மீறல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் விளக்கினார். பாஜகவின் அரசியல் நோக்கத்திற்காக குடியரசுத் தலைவர் பதவியை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
பாஜக தரப்பில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இதை “குடியரசுத் தலைவரை அவமதித்தல்” என்று கண்டித்தனர்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சந்தால் பழங்குடியின மாநாட்டில் கலந்துகொள்ள வந்த மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் வரவேற்பு அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, நிகழ்ச்சிக்கான இடத்தை கடைசி நேரத்தில் சிறிய இடத்திற்கு மமதா பானர்ஜி அரசு மாற்றியுள்ளது.
இது குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவரை, மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி திட்டமிட்டு அவமதித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தலைவர் நாட்டின் தலைவர். முதல் குடிமகன். அவர் ஒரு மாநிலத்திற்கு வருகிறார் என்றால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதும், அவருக்கான மரியாதையை கொடுப்பதும் நாட்டில் 140 கோடி மக்களுக்கும் மரியாதை கொடுப்பதற்கு சமமானது. குடியரசு தலைவரின் வருகையை, அவரது நிகழ்ச்சியை அலட்சியமாக நடத்துவதும், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கான இடத்தை மாற்றி பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதும் 140 கோடி இந்திய மக்களையும் அவமதிக்கும் செயல் .
குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் சார்புடையவர் அல்ல. அவர் அரசியல் பேசவும் வரவில்லை. எனவே அவரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமும், பழங்குடியின மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், மக்கள் தகுந்த தண்டனை வழங்குவார்கள்.” என தெரிவித்துள்ளார்.
