இந்தியாவில் கிரிக்கெட்டை நேசிப்பதை போல் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. அதே போல் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், பேட்ஸ்மேன்களுக்கு பெரும் ஆதரவை அளிக்கும் ரசிகர்கள், பவுலர்கள் மீது அதனை காட்டுவதில்லை என்ற வருத்தம் உண்டு.
இந்த நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியாவில் தற்போது அதிக மதிப்புமிக்க கிரிக்கெட் வீரர் என்றால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், “சென்னையில் உள்ளவர்கள் பந்து வீச்சாளர்களை விரும்புகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பும்ரா சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு ரஜினி ஸ்டைலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு பந்து வீச்சாளர்கள் எப்போதும் மிகவும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். இப்போது மிகவும் மதிப்புமிக்க இந்திய கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார்”என்று அஸ்வின் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா இன்னும் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நிலையில், பும்ராவை மதிப்புமிக்க இந்திய கிரிக்கெட் வீரர் என அஸ்வின் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
எனினும் கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதுவரை அவர் இந்திய அணிக்காக 195 ஆட்டங்களில் விளையாடி 397 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
சமீபகாலமாக ஓய்வில் இருந்த அவர், தற்போது வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகைகள் குறித்து அவதூறு: டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!