வலிமைக்குப் பிறகு அஜித்தை இயக்கப் போகும் இயக்குநர் இவரா?

Published On:

| By Balaji

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துவருகிறார். ரஜினியின் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி முக்கிய ரோலில் நடித்துவருகிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

வலிமை படமானது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிவிட்டது. மே மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு முடிய தாமதமாகும் என்ற காரணத்தினால் கொஞ்சம் தள்ளிப்போனாலும் எப்படியும் இந்த வருடம் படம் ரிலீஸாகும் என்றே சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் வலிமைக்குப் பிறகு அஜித் பட இயக்குநர் யார் என்பதே பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் கேள்வி. சுதா கொங்கரா, ஹெச்.வினோத், விஷ்ணுவர்த்தன் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அதுபோல, தயாரிப்பு நிறுவனங்களாக கோகுலம் ஸ்டூடியோஸ், சத்யஜோதி பிலிம்ஸ் பெயர்கள் அடிபட்டுவந்த நிலையில், மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் தான் அஜித் நடிக்கிறார் என்று நெருக்கமான வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அதற்கான காரணம் என்ன என்பதையும் கூட நம்முடைய தளத்தில் ஏற்கெனவே பதிவிட்டிருந்தோம்.

அதுபோல, அஜித்தை அடுத்து இயக்க இருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே அஜித்தை வைத்து கிரீடம் படத்தை 2007ல் இயக்கியவர் ஏ.எல்.விஜய். அஜித்துக்கு நாயகியாக த்ரிஷா நடித்திருந்தார். ஜி.வி.யின் இசையில் பாடல்களும் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. ஆக, மீண்டும் இவருக்கு அஜித் வாய்ப்பு கொடுக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இரண்டு படங்கள் இந்த வருட ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. ஒன்று, ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜியில் ஒரு கதையை இயக்கியிருக்கிறார். இது வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து, மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தை இயக்கிவருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

**-ஆதினி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share