மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் இன்று (ஜனவரி 21) காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வைத்திலிங்கம் இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய முகமாகப் பார்க்கப்பட்ட வைத்திலிங்கம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகக் கருதப்பட்டவர்.

ADVERTISEMENT

கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் தொழில் துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வீட்டு வசதி துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2011-2016 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதிமுகவின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தார். 2016 முதல் 2021 வரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, ஓ.பி.எஸ்.-க்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்து வந்த வைத்திலிங்கத்தை, எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கினார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓ.பி.எஸ். எந்தக் கூட்டணியில் இணைவார் என்பது குறித்த குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இன்று வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக ஓ.பி.எஸ்.-க்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், இன்று வைத்திலிங்கமும் இணைந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share