சிங்கம் பெத்த பிள்ளையினு தெரிய வைப்போம் வாடானு எழுதினேன் சிங்கம் இருக்குது நீ எங்கே? – வைரமுத்து உருக்கம்!

Published On:

| By Kumaresan M

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா காலமானார். இதையடுத்து, பாரதி ராஜாவின் நெருங்கிய நண்பரான இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘ எனது நண்பர் பாரதியின் மகன் மனோஜ் காலமானதை அறிந்து மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்ல வேண்டுமென்று வார்த்தை வரவில்லை . இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நடந்து இருக்க கூடாது என்று தோன்றினாலும் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமென்று காலம் விதித்திருக்கிற காரணத்தினால் மனோஜ்குமாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன் ‘ என்று தெரிவித்துள்ளார். vairamuthu about actor manoj

இன்று நடிகர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைர முத்து, “யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம் நடந்துள்ளது.

மனோஜ் என்கிற இளைஞன் மறைந்து விட்டான். பாரதிராஜா என்ற வயதானவர் பேச முடியாமல் தவித்து போய் இருக்கிறார். ஒரு முதியவர் பேச முடியாமல் தவிப்பது பெரிதும் சோகம் நிறைந்தது.

எனக்கு நீ செய்ய வேண்டிய கடமை இருக்கும்போது, நான் உனக்குக் கடமை செய்ய வைத்து காலம் தண்டித்துவிட்டதே என்று பாரதிராஜா உணர்வதை நானும் உணர்ந்து கொள்கிறேன்.

இந்த சோகத்தில் நம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் உள்ளது. கலை மீது அதீத ஈடுபாட்டுடன் இருப்பவர்கள் உடல் குறித்தான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கலைஞர்கள் தங்களின் உடலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனோஜின் மரணம் கற்றுக் கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார். vairamuthu about actor manoj

முன்னதாக வைரமுத்து நேற்று வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘ மகனே மனோஜ் போய் விட்டாயா? பாரதி ராஜாவின் பாதி உயிரே பாதி பருவத்தில் பறந்து விட்டாயா? சிங்கம் பெத்த பிள்ளையினு தெரிய வைப்போம் வாடா வாடானு உனக்கு அறிமுக பாடல் எழுதினேனே. சிங்கம் இருக்க பிள்ளை நீ போய் விட்டாயா? ‘என்று உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

இயக்குநர்கள் தம்பி ராமையா, பாண்டிராஜ், ரவிக்குமார் நடிகர் பிரபு , விஜய், சூர்யா , சிவக்குமார் , நாசர், சத்தியராஜ், கருணாஸ் மற்றும் ஏராளமான பிரபலங்கள் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share