மதிமுக நிர்வாக்குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. Vaiko puch durai vaiko
இந்த கூட்டத்தின் போது, மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகிய துரை வைகோவுக்கும், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்ட உரசலை பொதுச்செயலாளர் வைகோ காப்ரமைஸ் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “ஜனநாயக இயக்கங்கள் அனைத்திலும், நிர்வாகிகள் மத்தியில் மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை தான். அதனை தவிர்க்க முடியாது. சமூக வலைதளங்களில் சில பதிவுகள் வெளியிட்டதால், கட்சியின் தலைமைக்கு ஒரு அவப்பெயர் ஏற்பட்டதால் தான் இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்.
இந்த இயக்கத்திற்கும், வைகோவுக்கும் எனக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று மல்லை சத்யா உறுதியளித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு மீண்டும் நான் முதன்மை செயலாளராக தொடருவேன் என்று முடிவெடுத்துள்ளேன். மல்லை சத்யாவின் அரசியல் வாழ்க்கைக்கு நானும் உறுதியாக இருப்பேன்” என்றார்.
தொடர்ந்து, மல்லை சத்யா தனது கருத்தை தெரிவிக்க பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர், “தலைவர் வைகோ சொன்னது தான் என்னுடைய கருத்து” என்றார். உடனே வைகோ, “உங்க கருத்தை சொல்லுங்க சத்யா” என்றார். ஆனால், மல்லை சத்யா வேண்டாம் என்று மறுத்தார்.
அப்போது வைகோ, “மல்லை சத்யா பேசாமல் போய்விட்டார். துரை வைகோ பேசினார், மல்லை சத்யா பேச மறுத்துவிட்டார்” என பத்திரிகைகளில் எழுதுவார்கள் என்று சொன்னார். இதனால், பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்தனர். ஆனால், துரை வைகோ சிரிக்காமல் பிரஸ் மீட்டில் தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் கிரிப்பாகவே இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “என்னுடைய நடவடிக்கைகள் முதன்மை செயலாளர் துரை வைகோவை காயப்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து முதன்மை செயலாளராக நீடிக்க வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் அதனை மறுபரிசீலனை செய்துள்ளார். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். நாங்கள் இருவரும் எப்போதும் இணைந்து பயணிப்போம்” என்றார். Vaiko puch durai vaiko
