மதிமுகவில் பொதுக்குழு புயல்? திமுகவுடன் இணைக்க திடீர் போர்க்கொடி!

By admin

|

Published on 22 Mar 2022, 12:00 AM

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தபோது அவருடன் பொடா கைதியாக இருந்தவர்களில் சிவந்தியப்பனும் ஒருவர்.

இன்று சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளராக இருக்கும் சிவந்தியப்பன் உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்கள் மதிமுகவை திமுகவோடு இணைத்து விடலாம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

நேற்று மார்ச் 21ஆம் தேதி சிவகங்கையில் சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திமுகவிலிருந்து மதிமுக பிரிந்தபோது, அன்றைய திமுக தலைவர் கலைஞர் குடும்ப அரசியல் செய்வதாகச் சொல்லித்தான் வைகோ வெளியே வந்தார்.

ADVERTISEMENT

ஆனால் இன்று தன்னுடைய மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவந்துள்ளார். வைகோவின் இந்த முடிவுக்கு 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இனி மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்கள் அவர்கள்.

ADVERTISEMENT

இங்கே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் மதிமுக தலைமையகமான தாயகத்தில் துணைப் பொதுச் செயலாளர், தலைமைக் கழக செயலாளர் தேர்தல் நடைபெற்றது.
துணைப் பொதுச்செயலாளர்கள் இரண்டு பேர், தலைமைக் கழகச் செயலாளர் ஒருவர், தணிக்கைக்குழு உறுப்பினர் ஒருவர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் பெறும் நிகழ்ச்சி 21.03.2022 அன்று காலை 10 மணிக்கு தாயகத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையாளரும், அமைப்புச் செயலாளருமான வழக்கறிஞர் இரா.பிரியகுமாரிடம் வைகோ முன்னிலையில் துணைப் பொதுச்செயலாளர்கள் பொறுப்புகளுக்கு ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன் ஆகியோரும், தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு
துரை வைகோவும், தணிக்கைக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு தி.சுப்பையாவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்கள். இவர்களைத் தவிர இந்த இந்த பொறுப்புகளுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில்… நாளை மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் இவர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறார்கள்.

துரை வைகோ மீது கட்சியில் எந்த அதிருப்தியும் இல்லை என்பதை வெளிப்படுத்த தான் ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓட்டுப் பெட்டி மூலம் துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பதவியை அளித்த வைகோ… மீண்டும் உட்கட்சி தேர்தல் மூலம் அதை உறுதிப் படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் துரை வைகோவை எதிர்த்த அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தற்போது சமரசமாகி விட்டார்.

ஆனால் வைகோவோடு மிக நெருக்கமான தொடர்புகொண்ட மாவட்டச் செயலாளர்கள் தற்போது மீண்டும் திமுகவில் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

வைகோ ஆதரவு மாவட்ட செயலாளரிடம் இதுபற்றி பேசினோம். “வைகோ ஜனநாயக ரீதியில் தான் கட்சி நடத்துகிறார். சிவந்தியப்பன், செங்குட்டுவன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் நாளை பொதுக்குழுவுக்கு வந்தால் ரசாபாசம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அவர்கள் வரமாட்டார்கள்” என்கிறார்.

கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மின்னம்பலத்தில், [திமுகவுக்கு படையெடுக்கும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ரியாக்ஷன்](https://minnambalam.com/politics/21/11/30/26/mdmk-district-secarataries-ready-to-join-dmk-stalin-reaction) என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதில் கட்சிக்குள் மகனை திணிக்கும் வைகோவின் முடிவு பிடிக்காமல் 17 மாவட்டச் செயலாளர்கள் வரை திமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும்… அதற்கு கூட்டணி தர்மத்தை காரணமாக சொல்லி ஸ்டாலின் மறுப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு திமுக பொதுக்குழுவில் வைகோ ஏற்படுத்திய பரபரப்பு அளவுக்கு இல்லையென்றாலும்… நாளை சென்னை அண்ணாநகரில் கூடும் மதிமுகவின் பொதுக்குழுவில் இந்த மாவட்டச் செயலாளர்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**வேந்தன்**

.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

admin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel