திமுக, அதிமுக செய்தது ‘குதிரை பேரமா’? ’கழுதை பேரமா’? வைகோவை தொடர்ந்து துரை வைகோவும் பாய்ச்சல்!

By Mathi

|

Published on 31 May 2026, 10:27 AM

Durai Vaiko

“தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் சம்பவங்கள் குதிரை பேரமா? கழுதை பேரமா?” என மதிமுக (MDMK) முதன்மைச் செயலாளர் துரை வைகோ (Durai Vaiko) எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

”திமுகவும் 2006-ல் மதிமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து திமுகவில் இணைத்துக் கொண்டது; அதிமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து திமுகவில் இணைத்துக் கொண்டது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

திமுக மீதான வைகோவின் பகிரங்க விமர்சனம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மே 30-ந் தேதி துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் அரசு மீது ”குதிரை பேரம்” குற்றச்சாட்டு வைக்கிற இயக்கங்கள், நான் எல்லா இயக்கங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.. விஜய் தவெக அரசு செய்தது குதிரை பேரம் என்றால், இந்த அரசாங்கம் குதிரை பேரத்தில் ஈடுபட்டிருக்கிறது என்று சொன்னார்கள் என்றால், கடந்த காலங்களில் அவங்க (திமுக- அதிமுக) செஞ்சது என்னது? குதிரை பேரமா, கழுதை பேரமா?

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா?

விஜய் தலைமையிலான அரசாங்கம் எப்படி செயல்படுது, எங்களோட இயக்க நிர்வாகிகள் அவங்களுடைய மனநிலைமை, இதையெல்லாம் வச்சுதான் நாங்க ஒரு முடிவெடுக்க முடியும். இது ஒரு டெமாக்ரடிக் பார்ட்டி. அப்படி இருக்கும்போது எங்களோட பொதுக்குழுவை நாங்கள் கூட்டியிருக்கிறோம்.

பொதுக்குழுவை கூட்டி இந்த இயக்க நிர்வாகிகள் என்ன நினைக்கிறாங்க? இந்த கூட்டணியில் நாம தொடரணுமா? அப்படி இல்லைன்னா வேற ஏதாவது முடிவெடுக்கணுமாங்கிறது இயக்கம் முடிவெடுக்கும். இதை தனிப்பட்ட நானோ சரி, இல்லை எங்களோட பொதுச்செயலாளர் தலைவர் வைகோவோ சரி, இதை முடிவெடுக்க முடியாது. எந்தவொரு ஜனநாயகத்தை சார்ந்த எந்தவொரு இயக்கமாக இருந்தாலும் சரி, இப்போ நீங்க பொதுவுடைமை இயக்கமும் அதுதானே? ஒரு முடிவெடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆக்குகிறார்கள். காரணம் வந்து பார்த்தீங்கன்னா, அது ஒரு டெமாக்ரடிக் பிராசஸ். அதனால இந்த கூட்டணியில் இருப்போமா? இல்லையா? நாளைக்கு போயிருவோமா? என்பதை இப்போ நாம எப்படி சொல்ல முடியும்? இதை தனி மனிதனாக நான் முடிவெடுக்க முடியாது.

ADVERTISEMENT

விஜய் அரசுக்கு அவகாசம் கொடுங்க..

எந்தவொரு புதிய ஆட்சி வந்தாலுமே, குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து 1 வருஷம் நாம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஏன்னா, சென்ற ஆட்சியில் நியமிக்கப்பட்ட அந்த அதிகாரிகள் இனியும் தொடர்கிறார்கள், பல இடங்களில் தொடர்கிறார்கள். இன்னைக்குத்தான் மாவட்ட ஆட்சியர்கள், கலெக்டர்கள் பல மாவட்டங்களில் டிரான்ஸ்பர்ஸ் (Transfers) நடந்திருக்கிறது.

சோ (So) என்னன்னா, இது அதேமாதிரி, நான் சென்ற திமுக ஆட்சியில் இருக்கும்போதும், இதே புதுக்கோட்டையிலும் சரி, பல இடங்களில் என்கிட்ட கேள்வி என்ன கேட்பீர்கள்? “நீங்க வந்து இந்த மாதிரி சம்பவம், குற்ற சம்பவம் நடந்திருக்கு, இது நடந்திருக்கு” என்று. எந்த குற்ற சம்பவமும் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, குற்ற சம்பவங்கள் நம்ம வந்து 100 விழுக்காடு தவிர்க்க முடியாது. ஒரு வளரும் நாடு, வளர்ந்த நாடுகளிலேயே பிரச்சனைகள் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது.

நீங்க அதே நேரத்தில் நீங்கள் கம்பேர் (Compare) பண்ணிப் பாருங்கள், பிற மாநிலங்கள், வட மாநிலங்களில் பாருங்கள் நீங்க, அங்கே எவ்வளவு குற்ற செயல்பாடுகள்! நான் சொல்லவில்லை, நீங்கள் நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ (National Crime Records Bureau) படி, அதனுடைய தேசிய குற்றப்பிரிவு அறிக்கையின் படி வட மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. இருந்தாலுமே நான் அதை சரி என்று சொல்லவில்லை. இங்கு குற்றங்கள் நடக்கிறது. ஆனால் குற்றங்கள் அதைச் செய்வதற்கு, செய்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால்—கண்டிப்பாக சென்ற ஆட்சியாக இருக்கட்டும், இந்த ஆட்சியாக இருக்கட்டும் அவங்க எடுக்கிறார்கள். அதன் படி இந்த ஆட்சி எடுக்கிறது.

ஆனால், நீங்கள் வந்து ஒரு முழுமையாக 100% இது வந்து ஒரு குற்றங்களே இல்லாத ஒரு மாநிலம் என்றால், அது பிராக்டிகலி நாட் பாசிபிள் (Practically not possible).

முதல்வர் விஜய், மாற்றத்திற்கான முயற்சியை கண்டிப்பாக எடுக்க வேண்டும். சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோளாக நான் வைக்கிறேன்.

2006-ல் திமுக செய்தது தான்..

தேர்தல் முடிவுகளுக்குப் பின் உருவான அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது. எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மீண்டும் உடனடியாக ஒரு தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமற்றது; அது தேவையற்ற காலதாமதத்தை உருவாக்கி, இறுதியில் ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுத்துவிடும்.

மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்குதான் அதிக இடங்களைவழங்கியிருக்கிறார்கள். எனவே, மாநிலத்தில் ஒரு ஜனாதிபதி ஆட்சியைத் தவிர்ப்பதற்காகவும், அரசியல் குழப்பங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற கட்சிகள் இந்த புதிய அரசாங்கத்திற்குத் தங்களின் ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் வழங்கியிருப்பது ஒரு நிபந்தனையற்ற ஆதரவு அல்ல.. நிபந்தனைக்குட்பட்ட ஆதரவு. மதசார்பின்மை, சமத்துவம், சமூக நீதி
ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் நலனை முன்னிறுத்தி மட்டுமே இந்த ஆதரவை வழங்குவதாக அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் 2006-ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னரோ கூட அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைக்காத போது இது போன்ற அரசியல் உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், தொங்கு சட்டசபை போன்ற நிலை உருவாவதைத் தடுத்து, மக்களின் வாக்கு வீணாகாமல் ஒரு நிலையான அரசை அமைப்பதற்காகவே இந்த கூட்டணிக் கட்சிகள் தங்களின் ஆதரவை விஜய்யின் அரசுக்கு வழங்கியுள்ளன.

தனிச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால்..

திமுக கூட்டணியில நாங்க இருந்தோம், இன்னைக்கும் நாங்க தொடர்றோம். ஒரு இயக்கம் ஒரே கூட்டணியில இருக்கணும்கிறது அவசியம் கிடையாது.

இப்போ கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு தவறுன்னு சொல்லவில்லை.

எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்க திமுக சின்னத்துல போட்டியிட்டோம். நாங்க தனி சின்னத்தில் போட்டியிட்டு ஒருவேளை தொங்கு சட்டசபை உருவாகி ஆட்சிக்கு ஆதரவு கிடைக்காத நிலையில் மதிமுகவும் ஆதரவு தர வாய்ப்பிருக்கிறது. ஆனால் எங்களுக்குப் அந்த சூழ்நிலை வரல, ஏன்னா நாங்க எங்க சின்னத்துல போட்டியிடவில்லை. இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel