என்.பி.ஆர் பட்டியல்: ரம்ஜான், மிலாடி நபிக்கு இடமில்லையா?

Published On:

| By Balaji

என்.பி.ஆர் கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்) புதுப்பித்தல் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) நடத்துவதற்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் கிரிகோரியன் மாதங்களுடன் தொடர்புடைய முக்கியமான திருவிழாக்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில் வழக்கமாகக் கொண்டாடப்படும் இந்து மதப் பண்டிகைகள் மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, குருகோவிந்த் சிங் ஜெயந்தி மற்றும் புத்தபூர்னிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த பண்டிகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் முஸ்லிம் பண்டிகைகளான ரம்ஜான், மிலாடி நபி போன்றவை இடம்பெறவில்லை. இந்த நிலையில் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழத் துவங்கியுள்ளன.

இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 5) அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இந்திய நாட்டின் மக்கள் தொகையில், 13 விழுக்காடாக உள்ள கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் பண்டிகைகளை திட்டமிட்டே பாஜக அரசு மக்கள் தொகைப் பதிவேட்டின் கையேட்டில் புறக்கணித்து இருக்கிறது. இது மோடி அரசின் அப்பட்டமான இந்துத்துவா மதவாத சனாதன மனப்பான்மையைக் காட்டுகிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கையேட்டில் இஸ்லாமிய பண்டிகைகளையும் உடனடியாகச் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வைகோ, “மக்கள் தொகைச் சட்டம் மற்றும் குடிமக்கள் சட்டம் 2003ன் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிகளை மத்திய – மாநில அரசு ஊழியர்கள் மேற்கொள்வது கட்டாயமாகும். இந்தப் பணிகளைச் செய்ய மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. மிரட்டல் விடுத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அந்தந்த தேசிய இனங்களின் உணர்வுகளைத்தான் மாநில அரசுகளின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பாசிச சர்வாதிகார முறையில் மாநில அரசுகளை மிரட்டுவதும், அரசு ஊழியர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.மக்களாட்சிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share