தமிழக முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஜூன் 17-ந் தேதி சந்தித்து பேசினார். தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று வைகோவை சந்தித்து பேசியிருந்த நிலையில் இன்று முதல்வர் விஜய்யை வைகோ சந்தித்து பேசினார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, தற்போது திமுகவை விமர்சித்து வருகிறது. மதிமுகவின் அவைத் தலைவர் அர்ஜூன ராஜ், “திமுக ஒரு நச்சுப் பாம்பு; திமுகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாகவும் தவெக கூட்டணியில் இணைவது தொடர்பாகவும் ஜூன் 27-ந் தேதி நடைபெறும் மதிமுகவின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று தலைமைச் செயலகம் வந்த வைகோ, முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார்.
