கலிங்கப்பட்டியில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்?

Published On:

| By Balaji

தென்காசி மாவட்டம் கலிங்கப் பட்டியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் இன்னும் கட்டுக்குள் வராமல் மக்களை வருத்தி வருகிறது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம் வெயில், புயல், வெட்டுக்கிளித் தாக்குதல் என்று மக்கள் தொடர்ந்து பல இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெட்டுக்கிளிப் படைகள் பல லட்சம் மதிப்புடைய பயிர்களை நாசம் செய்துள்ளது. தமிழகத்திலும் சில இடங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக வருவது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ஊரான கலிங்கப்பட்டியிலும் வெட்டுக்கிளிகள் தாக்கம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கலிங்கப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படை எடுத்துள்ளன. பருத்திச் செடிகளின் மேல் படர்ந்துள்ள அவை அவற்றை நாசம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அச்சமடைந்த விவசாயிகள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு வருகை தந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ‘இவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் அச்சப்படத் தேவை இல்லை’ எனவும் கூறி உள்ளனர். இந்த தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனுடன் பேசியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அங்கு வருகை தந்து வெட்டுக்கிளி பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவதுடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

அத்துடன் தமிழக அரசின் விவசாயத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடிக்கும் அவர் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகளை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தென்காசி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share