’அடல்ட் காமெடி’ ரசிகர்களுக்கு மட்டும்…
ஒரு திரைப்படத்திற்கான கதை எந்த அளவில் இருந்தாக வேண்டும். மலை, குன்று, பாறை, பெருங்கல் என்று குறைந்துகொண்டே வந்து மணல் துகள் அளவில் நின்றாலும் கூட, ஒரு ரசிகன் அதனைக் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கத்தையும் அளந்து பார்க்கும் உத்தேசத்தோடு உருட்டும்போது அதன் பரிமாணம் விஸ்வரூபமெடுக்கும். vaibhav perusu movie review march 14
அந்த வகையில் மிகச்சிறிய விஷயமொன்றை எடுத்துக்கொண்டு இரண்டு மணி நேரப் படமாக ஆக்கப் பல நடிப்புக்கலைஞர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் இளங்கோ ராம்.
அவர் இயக்கியுள்ள ‘பெருசு’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இதில் வைபவ், சுனில், சாந்தினி, நிகாரிகா, தீபா, தனம், பாலசரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சரி, இப்படம் தரும் காட்சியனுபவம் எத்தகையது?

மரணம் தரும் அவஸ்தை! vaibhav perusu movie review march 14
ஊரே மதிக்கிற ஒரு முதியவர். அவரது பலவீனங்கள் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
அப்படிப்பட்ட முதியவர் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவாறே மரணமடைகிறார். அவரது மூத்த மகன் தான் அதனை முதலில் பார்க்கிறார். தனது இளைய சகோதரனை போன் செய்து வரவழைக்கிறார்.
காலையிலேயே டாஸ்மாக் வாசலில் வரிசையில் நிற்கும் அவரது சகோதரரும் மது புட்டியை வாங்கிக்கொண்டு ஓடோடி வருகிறார். தந்தை இறந்த அதிர்ச்சியை விட, இன்னொரு விஷயம் தான் அவர்களைப் பதற வைக்கிறது.
அந்த சின்ன விஷயம் ஊரில் பெரிய விஷயமாகப் பேசப்பட்டு, ’தந்தையின் மரண தருணம் விவாதப் பொருளாகுமே’ என்று இருவரும் பதற்றமடைகின்றனர். அந்த விஷயத்தைச் சரி செய்தபிறகே அவரது மரணத்தை அறிவிப்பது என்று முடிவெடுக்கின்றனர். முதலில், தங்கள் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்கின்றனர்.
அந்த விஷயத்தைச் சரி செய்யும் முயற்சிகளில் அவர்கள் இறங்குகின்றனர். எதுவும் பலன் தருவதாக இல்லை. vaibhav perusu movie review march 14
அதற்குள் விஷயம் மெல்லக் கசிந்து ஊரே அந்த வீட்டின் முன் திரள்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது ‘பெருசு’.
இந்தப் படத்தின் தொடக்க காட்சியே, அந்த பெரியவர் ஒரு இளைஞனின் கன்னத்தில் அடிப்பதாக அமைந்துள்ளது.
‘குளிக்கிற பொண்ணுங்களை எட்டிப் பார்க்கிறியே அசிங்கமா இல்ல’ என்று சொல்லி அவர் திட்டுகிறார். அதனைக் கேட்டதும், அந்த இளைஞன் கொலைவெறி ஆகிறார்.
அதனைத் தொடர்ந்து, அந்த முதியவரும் அவரது நண்பர்களும் ‘ஜொள்ளு’விட்டு திரும்புவதாக அக்காட்சி முடிவடையும். அதுவே அந்த முதியவர் பாத்திரத்தின் இயல்பைக் காட்டிவிடும்.
மேலே சொன்னதில் இருந்து, இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘அந்த விஷயம்’ என்னவென்பது பிடிபடும். அப்படியும் புரியாவிட்டால் ‘பெருசு’வை உடனடியாகப் பார்ப்பது நல்லது.
படத்தைப் பார்த்தபிறகு பெரும்பாலும் இரண்டு ரகமான ‘கமெண்ட்’களை தான் நாம் எதிர்பார்க்கலாம்.
‘எப்படி இப்படி ஒரு ஐடியாவை வச்சு படம் எடுத்திருக்காங்க’ என்று சிரித்தவாறே சொல்வது முதல் ரகம்.
இரண்டாவது, ‘எப்படிய்யா இந்த ஐடியாவை வச்சு படமெடுத்திருக்காங்க’ என்று எரிச்சலடைவது.
ரசிகர்கள் எந்த ரக கமெண்டை உதிர்க்கின்றனர் என்பதைப் பொறுத்து, ‘பெருசு’வின் வெற்றி அமையும்.

’டைமிங்’ அபாரம்! vaibhav perusu movie review march 14
’பஞ்சதந்திரம்’ படத்தில் ’முன்னாடி பின்னாடி என்ன இருந்தது’ என்ற நகைச்சுவை காட்சி உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்கவில்லை என்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை. பிடித்தது என்றால்தான் பிரச்சனையே.
‘எப்படி இப்படி இந்த காமெடி வொர்க் அவுட் ஆனது’, ‘அந்த டைமிங் எப்படி அமைஞ்சது’, ‘அதை யோசிச்சு எப்படி காட்சியா உருவாக்கியிருப்பாங்க’ என்று மண்டையைக் குடையும் கேள்விகள் முளைக்கும். vaibhav perusu movie review march 14
கிட்டத்தட்ட அதே தொனியிலான உழைப்பையும் சிரத்தையும் ‘பெருசு’ படத்தில் குவிந்திருக்கிறது. அதனைச் சிரமேற்கொண்டு ‘தங்கள் பணி பாத்திரங்களாக வாழ்வதே’ என்று கேமிரா முன் நடிப்புக்கலைஞர்கள் தோன்றியிருப்பதே இப்படத்தின் யுஎஸ்பி.
இந்த படத்தில் ஹாலஸ்யம் என்ற மைய பாத்திரத்தில் ஒரு முதியவர் நடித்திருக்கிறார். முதலிரண்டு காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அதுவே, திரைக்கதைக்குள் நம்மை இழுத்துவிடுகிறது.
சுனில் இதில் சாமிக்கண்ணுவாக வருகிறார். இளம் வயதில் இல்லாத சேட்டைகளை எல்லாம் செய்துவிட்டு, குடும்பஸ்தன் ஆனதும் பொறுப்போடு இருப்பது மாதிரி வெளியுலகுக்குத் தோற்றம் தருகிற பாத்திரத்தைச் சிறப்பாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சுனில் சகோதரர் வைபவ் இந்த படத்திலும் அவரது சகோதரராக, ‘துரைக்கண்ணு’ எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மது போதையில் உழலும் ஒரு மனிதராக, குடும்பத்தின் விருப்பங்களுக்கு எதிரான செயல்களைத் தன்னையறியாமல் செய்பவராக, இதில் வந்து போயிருக்கிறார்.
சுனில், வைபவ் பாத்திரங்களின் தாயாக நக்கலைட்ஸ் தனம் தோன்றியிருக்கிறார். அவரது சகோதரியாக தீபா சங்கர் வந்து போயிருக்கிறார். இருவருமே கதை நிகழும் இடத்தில் இரண்டு சகோதரிகளை நேரில் பார்ப்பது போன்று இதில் நடித்திருக்கின்றனர்.
சாந்தினி தமிழரசன் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்திருக்கிறார். படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.
வைபவ்வின் ஜோடியாக வரும் நிஹாரிகா, தமிழை ஒரு ‘ஜாங்கிரி’யாக எண்ணிப் பிய்த்துப் போடுவது போன்று வசனம் பேசியிருக்கிறார்.
நாயகிகள் இருவருக்குமே ‘தனியாக’ முக்கியத்துவம் தருகிற வகையிலான காட்சிகள் படத்தில் இல்லை.
இவர்களுக்கு அடுத்தபடியாக வைபவ்வின் நண்பனாக வரும் பால சரவணன், எதிர்வீட்டில் வசிப்பவராக வரும் லதா இருவரும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
பிரதான பாத்திரங்களாக வரும் இவர்களைத் தாண்டி ரெடின் கிங்ஸ்லி விடிவி கணேஷ், கருணாகரன், முனீஸ்காந்த், கஜராஜ், சுவாமிநாதன் உள்ளிட்டோர் சில காட்சிகளைத் தங்களுக்கானதாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வருமிடங்கள் ‘நாடக பாணி’யில் அமைந்திருப்பது இப்படத்தின் பலவீனம்.
அதேநேரத்தில், அவர்கள் இருப்பு ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. முக்கியமாக, அனைவரது ‘காமெடி டைமிங்’கும் அபாரம்.
இரண்டு நாளில் நிகழ்வதாக அமைந்துள்ள திரைக்கதையை நம்பும் வண்ணம் கதை நிகழும் களத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வைத் திரையில் உருவாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.
சூரியா குமரகுருவின் படத்தொகுப்பு, முடிந்தவரை காட்சிகள் அனைத்தையும் ஒரே கோட்டில் அடுக்கியிருக்கிறது; அதன் வழியே கதையைப் (?!) புரிந்துகொள்வதில் சிரமமில்லாமல் ஆக்கியிருக்கிறது.
இந்த படத்தின் கலை இயக்குனர் சுனில் வில்லுவமங்கலத், திரையில் ‘யதார்த்தம்’ தெரிய நெறையவே மெனக்கெட்டிருக்கிறார்.
இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை. வழக்கமான ‘கமர்ஷியல் பட பார்முலா’வில் கொண்டாட்டத்தை விதைப்பதாக இல்லாமல், அதேநேரத்தில் நகைச்சுவைப் படத்திற்கேற்ப ‘அமர்க்களமான இசையை’த் தந்திருக்கிறார்.
பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அருண் ராஜ்.
ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக் கதை நிகழும் இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிற உணர்வை ஊட்டியிருக்கிறார். மௌனம் இப்படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
இந்தப் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார் பாலாஜி ஜெயராமன். சில இடங்களில் பாலியல்ரீதியில் ‘இரட்டை அர்த்தம்’ தொனிக்கவும், சில இடங்களில் நேரடியாகவும் வசனம் அமைத்திருக்கிறார். எல்லைப்புறத்தில் ஒரு சுவர் அமைத்து, அதில் ஒரு நபர் கையில் தடியை வைத்துக்கொண்டு நடப்பது போன்று அவை அமைந்திருக்கின்றன.

‘பெருசு’ படம் முழுமையாக ஒரு பாலியல் பிரச்சனையொன்றை அடிப்படையாகக் கொண்டது. ‘அந்த விஷயம் நடந்தா எப்படியிருக்கும்’ என்று யோசிப்பவர்களில் பலர், இறப்பின்போது அது நிகழ்ந்தால் என்னவாகும் என்று பயமுறுவதும் மிக இயல்பானது.
அதையே கதைக்களமாக்கி இருக்கும் இயக்குனர் இளங்கோ ராம் பாராட்டுக்குரியவர்.
அவர் இயக்கிய ’டெண்டிகோ’ எனும் சிங்களப்படத்தைத் தழுவி இது அமைந்துள்ளது.
மொத்த திரைப்படமும் ஒரேயொரு பிரச்சனையை மட்டுமே சுற்றிச் சுழல்வதாக வடிவமைப்பது சவால் நிறைந்தது. அதுவும் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்று வகையிலான ’அடல்ட் காமெடி’ கதைகளைத் தேர்ந்தெடுத்துப் படமாக்குவது இன்னும் கடினம்.
அந்த வகையில், சற்றே பெரிய குறும்படத்திற்கான கதையை எடுத்துக்கொண்டு, அதனை இரண்டு மணி நேரத் திரைப்படமாகத் தரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறார் இளங்கோ ராம்.
காட்சியாக்கத்தில் பிரமாண்டத்தைக் கைக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து நிறைய நகைச்சுவை நடிகர் நடிகைகளைப் படத்திற்குள் கொண்டுவர வேண்டுமென்று முயன்றிருக்கிறார். அது இப்படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.
அதேநேரத்தில், முன்பாதியில் திரைக்கதை ஒரே இடத்திற்குள் சுற்றி வருவதாகக் காட்டப்பட்டிருப்பது படத்தின் மைனஸ். அந்த காட்சிகள் அனைத்தும் மேடை நாடகத்தைப் பார்ப்பது போன்றிருக்கின்றன.
சுனில், வைபவ், தனம் பாத்திரங்கள் முதியவரோடு எப்படிப்பட்ட உறவைக் கொண்டிருந்தன; தீபா, லதாவின் பாத்திரங்களும் இறந்த மனிதரோடு எப்படிப்பட்ட உறவைப் பாராட்டின என்பது திரைக்கதையில் சொல்லப்படவில்லை, சூசகமாகவும் உணர்த்தப்படவில்லை.
ஒருவேளை இறுதி படத்தொகுப்பில் அவை ‘கட்’ செய்யப்பட்டிருக்கலாம். அந்த தகவல்கள் படத்தோடு முழுமையாகப் பொருந்துவதில் தடையாக இருக்கின்றன.
போலவே கிளைமேக்ஸில் வரும் திருப்பமும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
அனைத்தையும் தாண்டி, ‘கொஞ்சம் புதுசா ஒரு ஐடியாவை ஸ்க்ரீன்ல பார்க்கணும்’ என்று விரும்புபவர்களை ‘பெருசு’ திருப்திப்படுத்தும்.
‘அந்த மாதிரியான’ கதைகளை, காட்சிகளை, வசனங்களைக் கண்டு எரிச்சல் அடைபவர்கள், கலாசாரத்தைக் காப்பாற்ற என்னால் மட்டும்தான் முடியும் என்று நம்புபவர்கள், குடி போதையில் உழன்று இடுப்புக்கீழே உடல் இருப்பதை மறந்து போனவர்கள் உட்பட இத்யாதி வகையறாக்களுக்கு இப்படம் அதிருப்தியை மட்டுமே தரும்.
இன்னும் செறிவான திரைக்கதையோடு ஆக்கியிருந்தால், உலக சினிமா வரிசையில் போற்றத்தக்க ஒரு ‘அடல்ட் காமெடி கண்டெண்ட்’ ஆக ‘பெருசு’ படம் மாறியிருக்கும். இப்போது, ‘உலக சினிமா’ பாணியிலான காட்சியாக்கத்தைக் கொண்ட ஒரு ‘சராசரி காமெடி படமாக’ இருக்கிறது.
அந்த வகையில், போதுமென்பவர்களுக்கு பொன் செய்யும் மருந்தாக இருக்கும் என்றிருப்பவர்களுக்கு ஏற்றது இந்த ‘பெருசு’!