சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கேங்கர்ஸ். vadivelu open up about his ban on shooting
இதில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், மைம் கோபி, பகவத் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சினியுலகம் யூடியூப் சேனலுக்கு வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவரும் பேட்டி அளித்தனர்.
அப்போது தொகுப்பாளர் கிருஷ்ணா, “நகைச்சுவை காட்சிகளை இம்ப்ரூவ் பண்ண விரும்பாத இயக்குநர்களிடம் பணிபுரிந்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வடிவேலு, ”நகைச்சுவை ஒன்றும் கல்வெட்டு கிடையாது. ஒருமுறை பெரிய டைரக்டர் கிட்ட அப்படி ஒரு சம்பவம் நடந்துச்சி. ஸ்கிரிப் பாத்துட்டு அதுல டெவலப் பண்ணி நான் சொல்ல சொல்ல, அவர் சிரிச்சிக்கிட்டே இருந்தாரு.
ஒரு கட்டத்துல, ’இல்லண்ணே, பேப்பருல டைப் பண்ணியாச்சி. அதுல என்ன இருக்கோ… அத மட்டும் பேசுங்க’ என்றார்.
’அப்படியா டெவலப் பண்ண வேண்டாமா?’ என்று கேட்டேன். ’இல்ல வேணாம். அதுல உள்ளத மட்டும் பண்ணுங்க’ என்றார்.
பெரிய டைரக்டர். அவருக்கும் எனக்கு தான் பிரச்சனை நடந்துட்டு இருந்துச்சு. அவரால் தான் 2,3 வருஷமாக நடிக்காமல் இருந்தேன். இதுக்கு மேல அவர் பெயரை சொல்ல விரும்பல. உங்களுக்கே தெரியும்.
அவருகிட்ட, ’அண்ணே நகைச்சுவை கல்வெட்டு கிடையாது. அது எமோசனல்’ என்றேன். அதுக்கு அவரு, சிகரெட் உறிஞ்சிக்கிட்டே, ’இல்ல சார். நான் ரொம்ப சோகமா இருக்கேன். அதுல என்ன இருக்கோ அத மட்டும் பண்ணுங்க’ என்றார். அதோட அவருகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.
அதுக்கப்புறம் ஷூட்டிங் வந்தாலே, ’பிரச்சனை பண்றதுக்குண்ணே வந்துட்டான்யா’னு கெட்ட வார்த்தை போட்டு திட்ட ஆரம்பிச்சாங்க” இப்படியே நம்ம மேலே பழிய போட்டு விட்டாங்க. இருந்தாலும் மக்களோட ஆதரவால இப்போ கேங்கர்ஸ் படத்துல நடிச்சிருக்கேன்” என்று வடிவேலு பேசினார்.
இதனையடுத்து அந்த பெரிய டைரக்டர் யார் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
