ஒருவரோடு ஒருவர் போட்டியிடத்தக்க நடிகர்கள் நடிகைகள் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறபோது, திரையைப் பார்க்கிற நமக்குள் ‘தீ’ பற்றிக் கொள்ளும். ’அப்படியொரு காம்பினேஷனா இவங்க இருப்பாங்கய்யா..’ என்ற நம்பிக்கையைத் தந்தது ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு, பகத் பாசிலின் நடிப்பு. vadivelu fahadh faasil marisan teaser out
அதில் இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்கிற மாதிரியான காட்சிகளில் நடித்திருந்தனர். ‘இவர்கள் சேர்ந்து திரிவதாகக் கதை அமைக்கப்பட்டால் எப்படியிருக்கும்’ என்று யோசித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவரது கதை திரைக்கதை வசனத்தில் அமைந்த ‘மாரீசன்’ படம் அதனைச் சாதித்திருக்கிறது.
சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிற இப்படத்தைத் தயாரித்திருப்பவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி. யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கோவை சரளா, விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன், சித்தாரா, லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.
’மாயாபஜார்’ படத்தில் இடம்பெற்ற ’ஆஹா இன்ப நிலவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே.. ஆடிடுதே.. விளையாடிடுதே..’ பாடலை வடிவேலு பாடுவது பின்னணியில் ஒலிக்க, ஒரு பைக் வெவ்வேறு நிலப்பகுதிகளில் பயணிப்பது பறவைப் பார்வையில் தெரிகிறது.
அந்த பைக்கில் பகத் பாசில் உடன் பயணிக்கிறார் வடிவேலு. இரவு, பகல் எனத் தொடரும் அந்த பயணம், அவர்களிடையே நல்ல அறிமுகத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதைக் காண்பிக்கின்றன சில ஷாட்கள்.
ஓரிடத்தில் பகத்தின் கன்னத்தில் அறைகிறார் வடிவேலு. அதன்பிறகு, குற்றம் நடந்த இடமொன்று காண்பிக்கப்படுகிறது. வடிவேலுவின் வீட்டுக்கு வந்து பகத் சந்திப்பதாக ஷாட்கள் நீள்கின்றன.
இறுதியாக, பெரிய குளத்தையொட்டி அமைந்த குட்டிச் சுவரோரம் இருவரும் இணைந்து மது அருந்திக்கொண்டே ‘மாயாபஜார்’ பாடுவதாக முடிவடைகிறது ’மாரீசன்’ டீசர்.
இனிய பயணத்தைத் தாண்டி, அதற்குச் சம்பந்தமில்லாத இடங்கள் திரையில் மலர்கிறபோது பின்னணியில் ஒலிக்கிற வடிவேலுவின் குரலும் வேகமெடுக்கிறது. அந்த இரண்டு வரிகளை மிக மெதுவாகப் பாடுவதுடன் குரல் மங்குகிறது.
’மாயாபஜார்’ படத்தில் காதலர்களாக வரும் அபிமன்யூ, வத்சலா பாத்திரங்கள் படகில் பயணிக்கிறபோது பாடுகிற பாடல் அது. பிறகு கிருஷ்ணர், ருக்மிணி பாத்திரங்கள் அதனைப் பாடும். அதன்பிறகு வத்சலாவின் பெற்றோர் அதில் ஏறிப் பயணிப்பதாக முடிவடையும்.
இந்த பாடலுக்கும் ‘மாரீசன்’ கதைக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் யோசித்தால் கதையைக் கண்டுபிடித்துவிடலாம் தான்.
ஆனால், அப்படி யோசிக்கவிடாமல் வடிவேலு, பகத் பாசிலின் ‘பெர்பார்மன்ஸ்’ஸில் மெய் மறக்கச் செய்கிறது இந்த டீசர். கதையிலுள்ள முக்கிய அம்சங்களைச் சொல்லும் வேலையை ‘ட்ரெய்லர்’ பார்த்துக் கொள்ளும். அந்த வகையில், ‘மாரீசன்’ படம் குறித்த எதிர்பார்ப்பினை விதைக்கிற வேலையைச் சரியாகச் செய்திருக்கிறது டீசர்.
நாகர்கோவில் வட்டாரத்தில் நிகழ்வதாகக் காட்டப்பட்டிருப்பதால் இப்படம் மலையாளத்திற்கும் ஏற்றதாகவே இருக்கும் என்று நம்பலாம்.
’மாமன்னன்’ போலவே வடிவேலு இதில் சீரியசாக நடித்திருக்கிறார். பகத் பாசிலோ மிகச்சரியான ‘கமர்ஷியல்’ கதையில் இடம்பெறுகிற தொனியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
’இந்த காம்போ எப்பூடி..’ என்று நம்மிடம் கேட்டிருக்கிறது ‘மாரீசன்’ குழு. படத்தைப் பார்க்கையில் இந்த எதிர்பார்ப்புக்கான பதிலைப் பன்மடங்கு வீரியத்துடன் தந்துவிட்டால் போதும். ‘இந்த காம்போ எப்பூடி..’ என்று ரசிகர்கள் பூரித்துப் போவார்கள்.
வடிவேலு உடன் மோகன்லால், மம்முட்டியே சேர்ந்து நடிக்க விருப்பப்பட்டதாகச் சொல்வார்கள். அதுவே அவரது நடிப்பின் மேன்மையைச் சொல்லும். அந்த வாய்ப்பு பகத் பாசிலுக்கு வாய்த்திருக்கிறது..!