இந்திய ராணுவத்தில் ஜேசிஓ மற்றும் இதர பிரிவில் மட்டும் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதன்படி மக்களவையில் உறுப்பினர் ஒருவர், ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என முப்படையில் சிப்பாய் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான மொத்த எண்ணிக்கை குறித்தும், இதில் எத்தனை பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது? என எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட், 2022 ஜூலை 1ம் தேதி நிலவரப்படி இந்திய ராணுவத்தில் (Junior Commissioned officers / Other Ranks ) உள்ளிட்ட பிரிவுகளில் 1,18,485 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்திய கடற்படையில் 11,587 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் மற்றும் இந்திய விமானப்படையில் 5,819 காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதில் 40 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் 3,000 வீரர்களும் இந்திய விமானப்படையில் 3,000 வீரர்களும் ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளது.
கலை.ரா
“மாமாகுட்டியே கூப்பிட்டாலும் போய்டாதீங்க” : வைரலாகும் ட்வீட்!
