ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க, கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.
படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பேசிய பலரும் படத்தைப் பற்றிப் பேசிய அதே அவ்வளவு எம் ஜி ஆர் பற்றியும் பேசினார்கள். எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு குறி வைக்கும் நோக்கில் அவர்கள் பேசியது இதுதான்.
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பேசியபோது, “என் அப்பா எம் ஜி ஆர் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவருடன் வேலை பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் அது இந்தப்படத்தில் நிறைவேறியுள்ளது”என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியபோது, ” சிவக்குமார் எனக்கு அண்ணன் மாதிரி தான், கார்த்தி சார் இந்தக் கதையை ஒத்துக்கொண்டதற்கு அவர் தான் காரணமாக இருப்பார். ஏனென்றால் எம்ஜிஆருடன் அதிகம் பழகியது அவர் தான். நலனிடம் இந்தப்படத்தைத் தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்யுங்கள் என்றேன், அதை செய்துள்ளார். சத்யராஜ் சார் எம் ஜி ஆர் அவருக்குத் தந்த கர்லாக் கட்டையைத் தந்து படத்தில் இதை பயன்படுத்தி நடித்து விட்டுத் திரும்ப கொடுத்துவிடனும் என்றார். அதைத் தூக்கவே முடியவில்லை. எம்ஜிஆரின் தீரம் அப்போது தான் புரிந்தது. “என்றார்.
சத்யராஜ் பேசியபோது, ” இங்கே நிறைய புரட்சித் தலைவர் ரசிகர்கள் வந்திருப்பீர்கள். எங்க வீட்டுப் பிள்ளை கார்த்தி இப்படத்தில் எம்ஜிஆராக நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. நான் தீவிர வாத்தியார் ரசிகர் ஆனால் இந்தப் படத்தில் நான் வில்லன். ஆனந்தராஜ் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளார். ஆனால் எம்ஜிஆர் டயலாக் எல்லாம் சொன்னால் அவரால் என்ன படம் என சொல்ல முடியாது. ” என்று சொல்லி விட்டு, எம்ஜிஆர் பட வசனங்களை விடாமல் பேசி ஆனந்த்ராஜிடம் எந்த வசனம் இந்தப் படத்தில் என்று சொல்லச் சொல்லி விளையாடினார்.
தொடர்ந்து பேசுகையில், “நான் எம்ஜி ஆரின் அரக்கத்தனமான ரசிகன். எப்போதும் ஒரே புரட்சித் தலைவர் தான். அவர் ரோலில் எங்க வீட்டுப்பிள்ளை கார்த்தி நடித்தது மகிழ்ச்சி. வேறு யாரவது நடித்திருந்தால் வயிறு புகைச்சலாகியிருக்கும். ஆனால் கார்த்தி நடித்தது மகிழ்ச்சி.”என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியபோது, ” நிஜ வாழ்வில் சூப்பர் ஹீரோ என எம்ஜி ஆரை சொல்லாம். அவர் வாழ்க்கையை அவர் ஆளுமையைத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.. “என்றார்.
சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்தி வேலன் பேசியபோது, ” கார்த்தி சார் எம் ஜி ஆரை எடுத்து நடிக்கும் போது எவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்திருப்பார் எனத் தெரியும். ஞானவேலின் அப்பா தீவிர எம் ஜி ஆரின் ரசிகர்.”என்றார்.
இயக்குநர் R ரவிக்குமார், “வா வாத்தியார் படம் நான் பார்த்து விட்டேன், நலன் சாரிடம் கார்த்தி சார், எம் ஜி ஆர் மாதிரியே தெரிகிறார் எனச் சொன்னேன். எம் ஜி ஆருக்கு வாழ்க்கை வரலாற்று படமெடுத்தால் அதற்குப் பொருத்தமானவர் கார்த்தி சார் தான்.”என்றார்.
இயக்குநர் நலன் குமாரசாமி பேசியபோது, “சூது கவ்வும் படமெடுத்த போது, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா? எனக் கேட்டார்கள், அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தோம். தர்மம் வெல்லும் என ஒரு படமெடுப்போம் என சொன்னேன். அது தான் இந்தப் படம். இந்தப் படம் எடுக்க வாய்ப்பு தந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு கோடான கோடி நன்றி. கார்த்தி மிக அழகாக கதாபாத்திரத்தில் பொருந்திப் போய்விட்டார். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். எம் ஜி ஆருக்கு ஒரு அர்ப்பணிப்பு தான் இந்தப் படம். “என்றார்.
நடிகர் கார்த்தி பேசியபோது, “இந்தப் படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர். அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார். அதை தன் ரசிகர்களும் சொல்லிக்கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர். எப்படி இப்படி ஒரு மனிதர் இருந்தார் என வியக்க வைத்தவர். “இருந்தாலும் மறைந்தாலும்” பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என பாடி வைத்து விட்டு போய் விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பேர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம். அவர் ரசிகர்கள் அன்புடன், அவர் ரசிகர்களின் அன்பிற்கான கடனாகவே ரசிகர்களுக்காகத் தான் இந்தப் படத்தில் நடித்தேன். ராஜ்கிரண் எம் ஜி ஆர் பக்தராக நடித்துள்ளார். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்.”என்றார்.
— ராஜ திருமகன்
