வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை!

Published On:

| By Kavi

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 5). இதனை முன்னிட்டு பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வ.உ.சி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி.ஆற்றிய பங்களிப்புக்காக நமது தேசம் அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு அடைவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவரது லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது வாழ்வை இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்து, மகத்தான தியாகங்களைச் செய்தவர். இளைஞர்களுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயல்பாடுகள் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து எழுத்தாலும், பேச்சாலும் போராடியதுடன், நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, உயிருள்ளவரை தேசத்திற்காக மக்களின் உரிமைக்காகப் பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151வது பிறந்தநாளில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் ‘கப்பலோட்டிய தமிழன்’ படம் இன்றும், நாளையும் 2 காட்சிகளாக ‘டிஜிட்டல்’ முறையில் திரையிடப்படவுள்ளது. காலை 10.30 மணிக்கு முதல் காட்சியும், பிற்பகல் 2 மணிக்கும் இரண்டாவது காட்சியும் திரையிடப்படுகிறது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share