தினகரனுக்கு ஆதரவாக மதுரையில் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Balaji

அதிமுக (அம்மா) பிரிவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் புதன்கிழமை (இன்று) அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி பங்கேற்கிறார்.

அதிமுக (அம்மா) பிரிவின் துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகியுள்ளார். மேலும் அவரை கட்சியை விட்டும் நீக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கி புதன்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான வெற்றிப்பாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக-வை வழிநடத்தும் தகுதி தினகரனுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் அவரையே ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. கட்சி தோற்றபோதெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வரவைத்ததுடன், கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர் தினகரன். திமுக-வை தைரியமாக எதிர்க்கக்கூடியவர். தற்போது அவர் இல்லாமல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தத்தளிக்கின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வின் தூதுவராகச் செயல்படுகிறார். அதிமுக (அம்மா) அணியினரும் அமைதி காக்கின்றனர். ஆனால் தினகரன் மீது மத்திய அரசு வழக்குகளை தொடுத்து பழிவாங்கி வருகிறது. இதை யாரும் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இதே நிலை நீடித்தால் அதிமுக-வையே அழிப்பார்கள். இதற்கு மேலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சக்தி எங்களுக்கு இல்லை. எனவே, தற்போது தினகரனை காக்க அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்துள்ளோம். தினகரனுக்கு எதிராக தொடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சிகளையும், சதிகளையும் கண்டித்தும், அதிமுக தொண்டர்கள் தினகரன் பக்கம்தான் என்பதை உணர்த்தவும் இன்று மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

ADVERTISEMENT

இதில், கர்நாடக அதிமுக (அம்மா) பிரிவுச் செயலர் புகழேந்தி பங்கேற்கிறார். அமைச்சர் செல்லூர் ராஜுவைத் தவிர, மதுரையிலுள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றியைப் பொருத்து தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share