சுரங்கங்களை மூட 48 மணி நேரம் கெடு!

Published On:

| By Balaji

ஆரவல்லி மலைத்தொடரில் இயங்கிவரும் சட்டவிரோதச் சுரங்கங்களை 48 மணி நேரத்துக்குள் மூடுமாறு, ராஜஸ்தான் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியிலிருந்து ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்குப் பகுதி வரை ஆரவல்லி மலைத்தொடர் பரவியுள்ளது. இதுபற்றி மத்திய அதிகாரமளித்தல் குழு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில், இப்பகுதியிலிருந்து 31 மலைகள் அல்லது மலைப் பகுதிகள் காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆரவல்லி மலையை ராஜஸ்தான் அரசு சரியாகப் பராமரிக்கவில்லை என்றும், அனுமதி பெறாத சுரங்கங்கள் அதிகளவில் அங்கு இயங்கி வருகின்றன என்றும், அவற்றை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, நேற்று (அக்டோபர் 23) நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

“டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு அளவு அதிகரிப்பதற்கு, ராஜஸ்தானில் நிகழ்ந்துவரும் மலைகள் மறைவும் ஒரு காரணம். அதனால், 115.34 ஹெக்டேர் பரப்பிலான ஆரவல்லி மலைப் பகுதியில் சட்டவிரோதச் சுரங்கங்களை 48 மணி நேரத்தில் மூட வேண்டும். இந்த விவகாரத்தினை அரசு மிக லேசாக எடுத்துக் கொண்டுள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரமாணப்பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யும்படி, ராஜஸ்தான் மாநிலத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share