டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்
**சிறப்புத் தொடர்: உங்கள் மனசு**
காதல் என்றால் என்னவென்ற கேள்விக்கு எவராலும் பதில் சொல்ல இயலாது. அந்த உணர்வு உண்டாக்கும் மாற்றங்களைப் பொறுத்து, ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் உண்டு. இதையெல்லாம் மீறி, காதல் தரும் நினைவுகள் எல்லோருக்குள்ளும் இருக்கும். ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு இதிலில்லை. ஆனாலும் காதலினால் சிலர் தங்களது வாழ்வையே பறிகொடுக்கின்றனர். தங்களது வாழ்வைச் சிதைத்து, காதலை உயிர்ப்பிக்க நினைக்கின்றனர். ஒரு காதல் காவியமானதா, இல்லையா என்பதை, அது தானாக முடிவு செய்துகொள்ளும் என்பதை மறந்துவிடுகின்றனர். இதன் பலன், காதல் தோல்வியால் தற்கொலை என்றோ, காதலுக்குச் சம்மதிக்காததால் ஜோடிகள் உயிரிழப்பு என்றோ செய்திகள் வெளியாகின்றன.
காதலர்களில் ஒருவர் உயிரிழந்து, இன்னொருவர் உயிரோடிருக்கும்போது என்ன நிகழும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், உயிரிழந்தவரின் நினைவுகள் உயிரோடிருப்பவரின் வாழ்க்கை முழுவதையும் சிறைக் கணங்கள் ஆக்கிவிடும். அப்படியொரு நிலையில்தான், மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் கார்த்திகா. நான்கு முறைக்கும் மேல் தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது அவரை அழைத்து வந்ததற்கான காரணம்.

கார்த்திகாவின் பெற்றோர், அவரது காதல் மற்றும் கல்யாணம் பற்றிப் பேசவே தயாராக இல்லை. அதனை அவர்கள் வெறுக்கவில்லை என்பது, அவர்கள் பேசப் பேசத் தெரிந்தது. ஆனால் தங்களது வார்த்தைகள் கார்த்திகாவைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.
கார்த்திகாவின் காதலுக்கு, அவரது பெற்றோரோ அல்லது உறவினர்களோ தடையாக இருக்கவில்லை. ஆனாலும் திருமணத்திற்கு ஒருநாள் முன்னதாக, கார்த்திகாவின் காதலன் நிரஞ்சன் தற்கொலை செய்துகொண்டார். இதனை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நிரஞ்சன் குறித்த நினைவுகளை மறக்க முடியாமல், தன்னையே அழித்துக்கொள்ள முற்பட்டிருந்தார் கார்த்திகா.
அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்து, மெல்ல சிகிச்சைகளைத் தொடங்கினோம். முதலில், கார்த்திகா எதையும் சொல்லத் தயாராக இல்லை. மெதுவாக, அவராகவே தன் மனதில் உள்ளதைப் பேசத் தயாரானார். நிரஞ்சனுடனான தனது காதல் எப்படித் தொடங்கியது என்று விவரித்தார்.
**பதின் வயதில் பூத்த காதல்**
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, நிரஞ்சன் – கார்த்திகா இடையே காதல் மலர்ந்தது. முதன்முதலாக, நிரஞ்சனது காதலை கார்த்திகா ஏற்றுக்கொள்ள ஒரே ஒரு விஷயமே காரணம். தனது ரத்தத்தில் நிரஞ்சன் கடிதம் எழுதிக் கொடுத்தார் என்பதே அது. அந்தக் கடிதத்தைப் பார்த்து, முதலில் கார்த்திகா அதிர்ச்சியடைந்தார். ஆனால் உடனடியாக மனம் மாறிவிட்டார். ரத்தத்தில் கடிதம் எழுதும் அளவுக்கு நம்மைக் காதலிக்கிறாரே என்ற எண்ணம், அப்போது அவர் மனதில் நிறைந்திருந்தது. அதன்பிறகு, கார்த்திகா – நிரஞ்சன் காதல் வலுவானது.
வழக்கமாக, காதலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே காதலர்களிடையே சிறு இடைவெளி தோன்றும். அதனைச் சரிசெய்யாவிட்டால், அது பூதாகரமாகும். நிரஞ்சன் – கார்த்திகா காதலிலும் அது நிகழ்ந்தது. அப்படிப்பட்ட நேரங்களில், நிரஞ்சன் ஒரே ஒரு உத்தியை மட்டுமே கையாளுவார்; உடனே, அவர் சொன்னபடி கேட்கத் தொடங்குவார் கார்த்திகா. வேறொன்றுமில்லை, “நான் சாகப்போகிறேன்” என்ற நிரஞ்சனின் ஒற்றைச் சொல் கார்த்திகாவிடம் பயத்தையும் பதற்றத்தையும் உண்டுபண்ணியது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, நிரஞ்சன் இவ்வாறு சொல்வது தொடர்கதையானது.
இந்தக் காரணத்தினாலேயே, ‘இவனோடு நமக்குச் சரிப்பட்டுவருமா’ என்றுகூட நினைத்திருக்கிறார் கார்த்திகா. நிரஞ்சனின் உடனடிக் கோபமும் உணர்வுபூர்வமான சுபாவமும் இந்தக் காதலைத் தொடர்ந்து உயிர்ப்பிக்குமா என்றும் யோசித்திருக்கிறார். இந்த எண்ணம் தொடர்ந்து எழுந்தாலும், அவரால் நிலையான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. அன்பாகப் பேசும் ஒருவர், “நான் சாகப்போகிறேன்” என்று அழுதுகொண்டே சொன்னால், யாரால் என்ன முடிவை எடுக்க முடியும்?
கார்த்திகா கடுஞ்சொல் ஏதாவது பேசிவிட்டால், உடனே அழுதுவிடுவார் நிரஞ்சன். ஆறேழு நாட்கள் சாப்பிடாமல்கூட இருந்திருக்கிறார். அவ்வாறு பலமுறை அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் கார்த்திகா. அப்போதெல்லாம், “நீ திட்டியதனால்தான் நான் அழுகிறேன். பேசாமல் செத்துப்போய்விடலாமா என்று பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார் நிரஞ்சன். வெறும் பேச்சோடு நிற்காமல், சில முறை தற்கொலைக்கும் முயற்சித்திருக்கிறார். இதனாலேயே, அவரது வார்த்தைகளை மீறி, கார்த்திகா எதையும் செய்யத் தயாராக இல்லை.

நம்மால் ஒரு உயிர் போய்விடக் கூடாது என்று பயந்தார் கார்த்திகா. ‘என்னை நம்பி இவன் இருக்கிறான்’ என்ற எண்ணமே, அவருக்குள் படிந்திருந்தது. ‘நான்தான் இவனைக் காப்பாற்ற வேண்டும். நான்தான் இவனது எண்ணங்களை மாற்ற வேண்டும்’ என்று எண்ணற்ற முறை அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அவர் நினைத்தபடி சிறிதளவுகூட நிரஞ்சனின் இயல்பை மாற்ற முடியவில்லை.
**ஆளுமைக் கோளாறு**
நிரஞ்சனிடம் ஆளுமை தொடர்பான மனநலக் கோளாறு இருந்தது. இது, கார்த்திகாவுக்குத் தெரியவில்லை. ஏன், நிரஞ்சனின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்கூடத் தெரியவில்லை. ஆனால் தனது ஆளுமை மூலமாக அவரது ஆளுமையை மாற்றிவிடலாம் என்று கார்த்திகா உறுதியாக நம்பினார்.
கார்த்திகாவின் பெற்றோர்களுக்கு, ஒருகட்டத்தில் இந்தக் காதல் தெரியவந்தது. நிரஞ்சன் குடும்பம் மற்றும் பின்னணி குறித்து, கார்த்திகாவிடம் கேட்டறிந்தனர். நிரஞ்சனின் தாய் உயிரோடில்லை. தந்தைக்குப் பெரிதாக வேலை எதுவும் கிடையாது. உறவினர்களின் தயவை நாடியிருந்தது நிரஞ்சனின் குடும்பம். முக்கியமாக, நிரஞ்சனின் தாய் வழி உறவினர் ஒருவர் தயவில்தான் அந்தக் குடும்பம் இருந்தது. அவர்தான் அந்த குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் எடுத்துவந்தார்.
நிரஞ்சனுடனான காதலை வெளிப்படுத்திய சில நாட்களிலேயே, இருவருக்கும் திருமணம் செய்துவைக்கும் பேச்சுகள் தொடங்கின. அதற்குள், பலமுறை நிரஞ்சனை நேரில் பார்த்திருந்தனர் கார்த்திகாவின் பெற்றோர். நிரஞ்சனை கார்த்திகா திருமணம் செய்வதில் அவர்களுக்குச் சிறிதும் உடன்பாடில்லை. ஆனால் கார்த்திகாவின் பிடிவாதத்தைத் தளர்த்த அவர்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை. நன்றாகப் படித்த ஒரு பெண்ணொருத்தி, தனது வாழ்க்கையைத் தானாகவே சரியாகத் தேர்வு செய்வாள் என்று நம்பியதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இவற்றுக்கு மேலாக, நடுத்தரக் குடும்பங்களைப் பயமுறுத்தும் ஒரு விஷயம் அங்கிருந்தது. நிரஞ்சனின் உறவினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் இருந்தனர். கார்த்திகாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமென்று, இவை அனைத்தையும் புறந்தள்ளினர் அவரது பெற்றோர்.
இதற்குக் காரணம், கார்த்திகாவின் தந்தையின் இயல்பு. அவர் ஒரு முற்போக்கான சிந்தனையாளர். வறுமையான பின்னணியிலிருந்து வந்து, சொந்தமாகத் தொழில் செய்து முன்னேறியவர் கார்த்திகாவின் தந்தை. மகள் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதில் அவருக்கு எந்த மன வருத்தமும் இல்லை. கார்த்திகாவின் தாயும் தன் மகளின் விருப்பத்தை, தேர்வினை மதிப்பவர். அதனால் அவர்கள் நிரஞ்சனின் குடும்பம், அந்தஸ்து, பின்புலம் குறித்துப் பெரிதாகச் சிந்திக்கவில்லை. இத்தனைக்கும், அப்போது நிரஞ்சன் வேலையற்றவராகத் திரிந்துகொண்டிருந்தார். இவை எல்லாமே சரியாகும் அல்லது சரிசெய்துவிடலாம் என்று நம்பினார் கார்த்திகாவின் தந்தை.
திருமணத்திற்கு முந்தைய நாள், “ஒரு மாப்பிள்ளையாக என்னை உங்கள் வீட்டினர் மதிக்கவில்லை” என்று கார்த்திகாவிடம் குறை கூறியிருக்கிறார் நிரஞ்சன். “என்னை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா” என்று திரும்பத் திரும்பப் புலம்பியிருக்கிறார். நிரஞ்சனைத் தனது பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் மட்டுமே, அவர்களது காதல் திருமணம் வரை வந்திருக்கிறதென்று கார்த்திகாவுக்குத் தெரியும். அதனைச் சொன்னபோதும், நிரஞ்சன் சமாதானமடையவில்லை. அப்போதும், “செத்துடலாம்னு இருக்கேன்” என்றிருக்கிறார்.

கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தைகள் என்றாலும், திருமணத்தின்போதும் இப்படிப் பேசுகிறாரே என்று நினைத்திருக்கிறார் கார்த்திகா. அவர் கிளம்பிச் சென்ற பிறகு, நிரஞ்சன் தந்தையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்ததைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் இதனைப் பெரிதாக எண்ணவில்லை. “இப்படித்தான் அவன் எப்போதும் பேசுவான்” என்று கார்த்திகாவின் புலம்பலை நிறுத்திவிட்டார். அவர் பலமுறை இவ்வாறு சொல்லியிருந்ததால், அவரது உறவினர்களோ, நண்பர்களோ அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அடுத்த நாள் காலையில் நிரஞ்சன் தூக்கில் தொங்குவதாகத் தகவல் வந்தது. என்ன செய்வதென்றே கார்த்திகாவுக்குப் புரியவில்லை. மனம் உறைந்து நின்றுவிட்டார்.
(நிரஞ்சன் ஏன் அந்த முடிவை எடுத்தார்? கார்த்திகா என்ன செய்தார்? காதல் என்பது ஏன் இந்த அளவுக்கு வதைக்கிறது? நாளை…)
**எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்**
கட்டுரையாளர்கள்:
**டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்**
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.
**டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்**
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார்.
குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.
