என் நெஞ்சம் பற்றி எரிகிறது: மோடி

Published On:

| By Balaji

புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் அனைவரின் நெஞ்சத்திலும் நெருப்பு பற்றி எரிவதைப் போல தன் நெஞ்சிலும் எரிவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப்ரவரி 17) பிகார் மாநிலம் பாட்னாவுக்குச் சென்றார். இந்த விழாவில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட ரூ.33,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், குழாய் எரிவாயுத் திட்டம், ராஞ்சி-பாட்னா ரயில் மின் வழிப்பாதை, ராஞ்சி-பாட்னா எக்ஸ்பிரஸ் சேவை உள்ளிட்ட பல திட்டங்களின் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.

ADVERTISEMENT

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் பலியான பாட்னாவைச் சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் பாகல்பூரைச் சேர்ந்த ரத்தன் குமார் ஆகிய இரு சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் பிரதமர் மோடி இந்த விழாவில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், “புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் அனைவரின் நெஞ்சத்திலும் நெருப்பு பற்றி எரிவதைப் போல என் நெஞ்சிலும் பற்றி எரிகிறது என்பதை இங்குள்ள மக்களுக்குச் சொல்லிக்கொள்ள விழைகிறேன். புல்வாமாவில் உயிரிழந்த படை வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிதிஷ் குமார் பேசுகையில், “படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த நாடும் மிகுந்த கோபத்தில் உள்ளது. கொன்றவர்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. படை வீரர்களின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதைக் கோழைத்தனமானதாக ஒட்டுமொத்த நாடும் எண்ணுகிறது” என்றார். புல்வாமாவில் இழந்த ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் பழி தீர்ப்போம் என்று கூறிய ராம் விலாஸ் பஸ்வான், “மத்திய அரசு பெரும்பான்மை பலத்துடன் தற்போது ஆட்சியில் இருக்கிறது. எனவே என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் துணிந்து எடுக்கலாம்” என்றார்.

ADVERTISEMENT

முன்னதாக நேற்று அசாமில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் அல்ல; பாஜக என்று தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் காங்கிரஸை விமர்சித்துப் பேசியிருந்தார். “படை வீரர்கள் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது. இது மோடியின் அரசு. தேசப் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். பாஜக அரசு தீவிரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share