ADVERTISEMENT

இடைத் தேர்தல்: அதிமுக-பாஜக கூட்டணி உடைகிறது!

Published On:

| By Balaji

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் என்று அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுடன் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காலூன்றுவதற்கு முயற்சி செய்துவரும் பாஜக, இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற்றுவந்தது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி சார்பாக காமராஜர் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என அதிமுக நேற்று முன்தினம் அறிவித்தது.

ADVERTISEMENT

இந்தத் தகவல் புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருந்த பாஜகவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தனித்துப் போட்டியிட முடிவுசெய்த பாஜக, விருப்ப மனு பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தும் பணிகளையும் நேற்று (செப்டம்பர் 27) மேற்கொண்டது.

இதனையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன், பாஜக அலுவலகத்திற்கு வந்து மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறும், நேர்காணலை நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திரும்பிச் சென்றார். இதனையடுத்து, பாஜக சார்பில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சாமிநாதன், “காமராஜர் நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அதற்கான பணிகளை பாஜக தொடங்கிவிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை இரு தினங்களுக்கு முன்பு சந்தித்தபோது, அவர்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்று கூறியதால்தான் நாங்கள் வேட்பாளர் தேர்வுக்கு தயாரானோம். திடீரென அதிமுக-பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

எங்கள் தேசிய தலைமையிடம் பேசி ஒப்புதல் பெற்று அதனை அறிவித்திருக்கலாம். ஆகவே, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் மத்தியில் காமராஜர் நகர் தொகுதியில் பாஜக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் இனி எங்களது தேசியத் தலைமையிடம்தான் பேச வேண்டும். தேசியத் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share