ஆர்.கே. நகர் தேர்தல்: திமுக தயார்!

Published On:

| By Balaji

ஆர்.கே. நகர் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனைச் சந்திக்க திமுக தயாராக உள்ளதாக அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை இன்று (அக்.13 ) சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் வருகை தந்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு இதுவரை எந்தத் தகவலையும் கூறவில்லை. அவர்களைப் போல் இல்லாமல், தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையைக் கண்டறிந்து இந்தக் குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ். – மோடி இடையேயான சந்திப்பு தொடர்பாகக் குறிப்பிடும்போது, “தர்மயுத்தம் பதவி யுத்தம் போன்றவை நடத்தியவர் பன்னீர்செல்வம். இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்து, வெற்றிகரமாக முடித்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி சொல்வதற்காக டெல்லி சென்றுள்ளார்” எனத் தெரிவித்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அதை எதிர்கொள்ளும். நாளைக்கே தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அங்கு போட்டியிடும். ஆனால், என்ன காரணங்களுக்காக ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டதோ அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா, டெங்கு காய்ச்சலால் பலியானவர்கள் குறித்துப் பட்டியலிடத் தயாரா எனக் கேட்டுள்ளார். எந்தெந்த மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து விளக்க சரோஜாவை நேரில் அழைத்துச் செல்லத் தயாராக உள்ளேன். வருவதற்கு அவர் தயாராக உள்ளாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share