உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை கட்டுமான பணியின்போது ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் – சில்க்யார பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. உத்தரகாசியிலிருந்து யமுனோத்ரிதாம் வரையிலான பயணத்தை 26 கி.மீ ஆக குறைக்கும் நோக்கில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து காவல்துறை தரப்பில், “நான்கரை மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமுள்ள பகுதி அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்துள்ளது. தகவல் கிடைத்ததும் உத்தரகாசி போலீஸ் சூப்பிரண்டு அர்பன் யதுவன்ஷி சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
சுரங்கப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் வரை சிக்கியிருக்கலாம். சுரங்கப்பாதையில் ஆக்சிஜன் குழாயை செருகவும் சிக்கிய தொழிலாளர்களுக்கு உதவவும் ஒரு குறுகிய திறப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதை விபத்து குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில், “விபத்து நடந்ததில் இருந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் பாதுகாப்பாக திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!
INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!
