Rat Hole Mining Method
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் எலி துளை சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து உள்ளே சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணியில் என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் படை வீரர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சுரங்கத்தில் கடந்த 12ஆம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்து வந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
சுமார் கடந்த 17 நாட்களாக உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வந்தது.
அதன்படி தொழிலாளர்கள் இருக்கும் பகுதி நோக்கி மலையின் மேலிருந்து செங்குத்தாகவும், சுரங்கத்தின் வாயிலில் இருந்து கிடை மட்டமாகவும் இரண்டு துளையிட்டு அது வழியாக குழாய் போட்டு ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஏற்கனவே சுரங்கம் அமைப்பதற்காக போடப்பட்ட இரும்பு வளையங்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அங்கே மீட்பு பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

எலி துளை சுரங்கம் தோண்டும் முறை!
தொடர்ந்து நவீன இயந்திரங்கள் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், ’எலி துளை சுரங்கம் தோண்டும் முறை’ பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த முறையில் குழாய்களுக்காக அமைக்கும் பாதை சிறியதாக இருக்கும் என்பதாலும், குழாய் உள்ளேயே சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாலும் எலி துளை சுரங்கம் தோண்டும் முறை ஆபத்தானது என்று கூறி தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது.
எனினும் தற்போது எலி துளை சுரங்கம் தோண்டும் முறையை பயன்படுத்தி தான் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
அதன்படி, இடிபாடுகளை அகற்றும் பணியில் 12 எலி துளை சுரங்க நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீவிரமாக நடைபெற்று வந்த அந்த பணி நிறைவடைந்த நிலையில், தொழிலாளர்களை மீட்கும் வகையில் கிடைமட்டமாக குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது அந்த பணிகளும் நிறைவடைந்த நிலையில், சுரங்கப்பாதைக்குள் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை உள்ளிருந்து மீட்டு வரும் பணியில் என்.டி.ஆர்.எஃப் மற்றும், எஸ்.டி.ஆர்.எஃப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கப்பாதையில் மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருகை தந்துள்ளார்.
மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனை அழைத்து செல்வதற்கு சுரங்கப்பாதை வாயிலில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவர்களும் உடைமைகளுடன் சுரங்கப்பாதை வாயிலில் உணர்ச்சிப்பெருக்குடன் காத்திருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை பிரபல நகைக்கடையில் கொள்ளை: தனிப்படைகள் அமைத்து விசாரணை!
சேரி மொழி பேச்சு: குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
Rat Hole Mining Method
