USA vs BAN: 2024 டி20 உலகக்கோப்பை தொடர், இம்முறை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. ஜூன் 2 அன்று துவங்கவுள்ள இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், இந்த 20 அணிகளும் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அமெரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த மே 21 அன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில், அமெரிக்கா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வங்கதேச அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், நேற்று (மே 23) இந்த தொடரின் 2வது போட்டியில் 2 அணிகளும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி சிறப்பாக பந்துவீசியபோதும், அமெரிக்க அணிக்காக ஸ்டீவன் டெய்லர் (31 ரன்கள்), மோனான்க் படேல் (42 ரன்கள்), ஆரோன் ஜோன்ஸ் (35 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், அந்த அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் சேர்த்தது.
பின், 145 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, துவக்கத்தில் இருந்தே அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
ஒருபுறம் சீரான இடைவேளையில் விக்கெட் வீழ்ந்த நிலையில், மறுமுனையில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (36 ரன்கள்), தவ்ஹித் ஹ்ரிடோய் (25 ரன்கள்), ஷகிப் அல் ஹசன் (30 ரன்கள்) ஆகியோர் பொறுப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர்.
ஆனால், அமெரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் வங்கதேச அணி 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், 6 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 2-0 என அமெரிக்கா கைப்பற்றியது.
இப்போட்டியில், அமெரிக்காவுக்காக 3 விக்கெட்களை கைப்பற்றிய அலி கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பீலா வெங்கடேஷ் புகார்… ராஜேஷ் தாஸ் கைது!
Poco F6: இந்தியாவில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை களமிறக்கிய போகோ