சிறப்புக் கட்டுரை: மதராஸின் பைடன்

Published On:

| By Balaji

நிவேதிதா லூயிஸ்

கமலா ஹாரிஸின் இந்திய வேர்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென பைடனின் இந்திய வேர்கள் ஆய்வுக்கு உள்ளாகியிருக்கின்றன. கமலாவின் தாய் சியாமளா கோபாலனின் உறவினர்கள் வசிக்கும் பெசன்ட் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜார்ஜ் கதீட்ரல், பைடனுக்கு இருக்கும் இந்திய தொடர்பைக் கண்டறிய வழி செய்யலாம்!

ஜார்ஜ் கதீட்ரலில் உள்ள கிறிஸ்டோஃபர் பைடன் என்ற ‘மாஸ்டர் அட்டென்டன்ட்’டின் நினைவு கல்வெட்டு 1858ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பைடன் என்ற அயர்லாந்து நாட்டின் குடும்பப் பெயர் அவ்வளவு அதிகம் பயன்பாட்டில் இல்லை என்பதால், சென்னையின் பைடனுக்கு அமெரிக்க ஜோ பைடனுடன் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கப்பல் செலுத்தி வந்த கேப்டனான கிறிஸ்டோஃபர் பைடனுக்கு வில்லியம் பைடன் என்ற சகோதரனும் உண்டு. இரு பைடன் சகோதரர்களும் ஆங்கிலேயக் கப்பல்களில் தேர்ட் மற்றும் ஃபோர்த் மேட்களாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். இவர்களில் வில்லியம் 1843ஆம் ஆண்டு பர்மாவில் மரணமடைந்தார். கிறிஸ்டோஃபரோ, ஆங்கிலேயக் கப்பல்களில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே கேப்டனாகப் பணியாற்றி கப்பல் செலுத்தினார். ஒரு கட்டத்தில் கேப்டன் கிறிஸ்டோஃபர் பைடன் மதராஸில் குடியேறினார். ஹாரியட் ஃப்ரீத் என்ற ஆங்கிலேயப் பெண்மணியை 1819ஆம் ஆண்டு திருமணம் செய்தவர், அவரையும் மதராஸ் நகரில் குடியமர்த்தினார்.

ஆங்கிலேயருடைய ‘மாஸ்டர் அட்டெண்டன்ட்’டாக கப்பல் தளத்தில் பணியாற்றி வந்தார் கேப்டன் பைடன். ஹெச்.சி.எஸ். அதிகாரியான கிறிஸ்டோஃபர் 19 ஆண்டுகள் மதராஸில் பணியாற்றி 1858ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று இறந்ததாக சொல்கிறது பைடன் நினைவைப் போற்றும் கல்வெட்டு. இந்த கல்வெட்டைச் செய்தவர்கள் பொது மக்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோஃபர் பைடனின் மனைவி ஹாரியட் பைடன்1880ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இறந்து போனார். ஆனால் தன் கணவர் பைடனது முக்கிய கடிதங்கள் மற்றும் ஆவணங்களை ‘பைடன் பேப்பர்ஸ்’ என்று தொகுத்து வைத்திருந்தார். பின்னாளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அந்த தொகுப்பு வழங்கப்பட, மிக முக்கியமான அந்த பைடன் பேப்பர்களிலிருந்து நமக்கு பைடன் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

1839 முதல் 1858 வரை மரைன் ஸ்டோர்கீப்பர் பணியிலும் பைடன் இருந்துள்ளது இந்த ஆவணங்கள் சொல்கின்றன. அந்தமானில் கலங்கரை விளக்கங்கள் தேவை என்று தொடர்ந்து பைடன் வலியுறுத்தி வந்தார். ஜார்ஜ் கோட்டைக்கு அருகே கிளைவ் பத்தேரி மற்றும் தானியக் கிட்டங்கிக்கு (கமிசரியட் கிரானரி) இடையே உள்ள மணற்பாங்கான பகுதியைப் பாதுகாப்பாக கப்பல்களை நங்கூரமிட வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மதராஸில் கப்பல்களை எளிதாக நிறுத்த கப்பல் துறை ஒன்றின் அவசியத்தையும் எழுதினார். மதராஸில் கப்பற்படை பயிற்சி பள்ளி ஒன்றுக்கு அரசின் நிதியுதவி குறித்தும் பைடன் பேப்பர்கள் பேசுகின்றன. 1830ஆம் ஆண்டு கிறிஸ்டோஃபர், ‘பைடன்’ஸ் நேவல் டிசிப்ளின்’ என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

1851ஆம் ஆண்டு கூவம் ஆற்றின் நிலையை மேம்படுத்த அன்றைய மிலிட்டரி போர்டின் செயலாளருக்கு பைடன் கடிதம் எழுதி உள்ளார். 1842 முதல் 1853 வரை சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மதராஸ் கடற்பகுதியில் சேதமடைந்த கப்பல்கள் பற்றிய தகவல் தொகுப்பும் செய்திருக்கிறார். 1842ஆம் ஆண்டு 22 முதல் 30 அக்டோபர் வரை மதராஸ் சந்தித்த மோசமான புயல் குறித்த கட்டுரை ஒன்று ஆசியாட்டிக் சொசைட்டி ஜர்னல் ஏட்டில் வெளியாகியுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் கேப்டன் பைடன் அளித்ததாக கட்டுரையை எழுதிய ஹென்றி பிட்டிங்டன் எழுதுகிறார்.

லேடி ஃபீவர்ஷாம், வாட்டர்லூ, விட்பி, ஹைலாண்டர், ரிபல்ஸ், அமேலியா, ஃப்ரான்செஸ் ஸ்மித் என பல ஆங்கிலேயக் கப்பல்கள் சந்தித்த சேதம் பற்றிய குறிப்புகள் பைடன் அளித்தவை என்றும் ஜர்னல் சொல்கிறது. மீண்டும் 1851ஆம் ஆண்டு ஏப்ரல் 30 முதல் மே 5 வரை வீசிய புயலின் தாக்கம் குறித்தும் நுணுக்கமான விவரங்களைத் தொகுத்து ஆசியாட்டிக் ஜர்னலில் கட்டுரை எழுத பைடன் உதவியதாக நன்றி தெரிவிக்கிறார் பிடிங்டன்.
பைடன் நகருக்கு அவரது பெயரிலேயே விட்டுச்சென்ற மிக முக்கியமான நிறுவனம் – பைடன் டெஸ்டிட்யூட் சீமென் ஹோம். கப்பல் படையில் பணியாற்றிய ஆதரவற்ற கப்பல் பணியாளர்களுக்கு உதவ ராயபுரம் பகுதியில் பைடன் தன் சொந்த செலவில் நிறுவிய இல்லம் அது. அழகான கரையோர பங்களா அது என்பதைத் தவிர வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.

கிளென் பார்லோ என்ற ஆங்கிலேயர் 1921ஆம் ஆண்டு எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் மெட்ராஸ்’ நூலில் ‘புதிதாக தெரியும் பைடன் ஹோம் பிரமாண்ட வீடு. இப்போது அது ஹார்பர் மாஸ்டரின் வீடாகப் பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்தில் கையில் பணமிருந்தும் தங்க இடமற்ற நிர்கதியான மாலுமிகளுக்கு அந்த வீடு பெரிய புகலிடம்” என்று தெரிவிக்கிறது. ராயபுரம் பகுதியில் ஆய்வுகள் செய்யும்போது இந்த பைடன் சீமென் ஹோம் எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்திருக்கிறேன்.

ஒரு வழியாக சென்னை போர்ட் டிரஸ்டின் ‘ஏரியா 1’ பகுதியில் இந்த பைடன் சீமென் ஹோம் இருந்த தகவல்களைக் கேட்டறிந்து கொண்டேன். கட்டடம் இன்று இல்லை என்று சொல்லும் நண்பர், அந்த இடத்தில் மொலாசஸ் மற்றும் எண்ணெய் சேமிப்புக் கிடங்குதான் உள்ளது என்றும் சொல்கிறார். போர்ட் டிரஸ்டின் 2016ஆம் ஆண்டு ‘லேண்ட் யூஸ் பிளானும்’ இதை உறுதி செய்கிறது. 4427 சதுரமீட்டர் நிலப்பகுதியிலுள்ள துறைமுக எண்ணெய் கிட்டங்கியில் பைடன் பிளேசும் அடக்கம். 2010ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் பத்மனாபா கமிட்டி வெளியிட்ட சென்னையின் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டடங்கள் பட்டியலில் ‘2ஏ’ பிரிவில் பைடன் ஸ்டாஃப் குவாட்டர்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராயபுரம் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு ஒன்று நம் கவனத்தை ஈர்க்கிறது. மொலாசஸ் மற்றும் எண்ணெய் கிட்டங்கியை பொது மக்கள் வாழும் பகுதியான பைடன் பிளேஸ் ரெசிடென்ஷியல் குவாட்டர்ஸ் பகுதிக்குள் அமைக்கக் கூடாது என்று மனு செய்தது இந்த அமைப்பு. ஆனால் தற்காலிக கிட்டங்கிகளை அமைத்துக்கொள்ள போர்ட் டிரஸ்டுக்கு நீதிமன்றம் அனுமதி தந்தது. (P 21315 of 2009) கிறிஸ்டோஃபர் பைடன்கட்டிய பைடன் பிளேஸ் இப்போது இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு விடை சென்னை போர்ட் டிரஸ்டிடம் மட்டுமே உள்ளது.

தொல் சின்னங்களை பாதுகாக்க கமிட்டிகள் மட்டுமே பத்தாது. சட்டம் இன்னும் கடுமையாக வேண்டும், முக்கியமாக இது போன்ற தொல் சின்னங்கள் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் எளிதாகக் கிடைக்கும் வெளிப்படைத்தன்மை வேண்டும். தொல் சின்னங்கள் மக்கள் சொத்து; தேசத்தின் சொத்து.

பைடன் கட்டித் தந்த கட்டடம் இன்று இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் ஒரு புறம், ஜோ பைடனுக்கும், கிறிஸ்டோஃபர் பைடனுக்குமான தொடர்பை வெளிக்கொணர்வது இன்னும் சிக்கலான விஷயம்தான். 1963ஆம் ஆண்டு லெஸ்லி பைடன்என்ற நாக்பூர் வாசி ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மதராஸின் கிறிஸ்டோஃபர் பைடனின் மகனான ஹொராஷியோ பைடன் லெஸ்லியின் தந்தை ஆவார். லெஸ்லி, தனக்கும் ஜோ பைடனுக்கும் உறவு முறை இருக்க வாய்ப்பிருப்பதாக அனுப்பியிருந்த கடிதத்துக்கு, ஒன்பது ஆண்டுகள் கழித்து பதில் அனுப்பினார் ஜோ பைடன்.

அந்தக் கடிதத்தில் என்ன இருந்தது என்பது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. 1983ஆம் ஆண்டு லெஸ்லி பைடன் இறந்து போனார். 2013ஆம் ஆண்டு இந்தியா வந்த ஜோ பைடன், லெஸ்லி தன்னை தொடர்பு கொண்ட செய்தியை மும்பை கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். லெஸ்லி இறந்துவிட்ட காரணத்தால் கிறிஸ்டோஃபர் பைடனுக்கும் ஜோ பைடனுக்குமான தொடர்பு என்ன என்பது விளங்கிக்கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. மதராஸின் பைடன் எங்கே வாழ்ந்தார், அவர் நினைவாக விட்டுச் சென்றது இங்கு எது என்று ஒருவேளை ஜோ பைடன் நம்மிடம் கேட்டால், நம்மிடம் என்ன விடை இருக்கிறது?

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share