அமெரிக்கக் குடியுரிமை தேர்வு முறை கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் மகிழ்ச்சி!

Published On:

| By Balaji

அமெரிக்காவில் குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் ரத்து செய்துள்ளார். இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அமெரிக்காவில் பணி நிமித்தமாகக் குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும் புரிதலையும் நிரூபிக்க இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் குறைக்க குடியுரிமை தேர்வு முறைகளை கடுமையாக்கியது. 2008ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளை மாற்றியது.‌

குறிப்பாக தேர்வில் 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது. இந்த கேள்விகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானதாகவும் கடுமையாகவும் இருந்தன. இந்த விதிமுறைகள் 2020 டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்குப் பொருந்தும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார்.

அந்தவகையில் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி இனி 2008ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் எனவும் இது மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிக அளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share