வைஃபை ஆன் செய்ததும் தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பற்றிய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபரான கௌதம் அதானி, அமெரிக்காவின் மிக சீரியசான பொருளாதாரக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்.
நாடாளுமன்றம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி கூட இருக்கும் நிலையில்… மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரும் புயலாக வீசத் தொடங்கியிருக்கிறது அதானி விவகாரம்.
ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீது முறைகேட்டுப் புகார்களை கூறியது. ஆனால், அதை அப்போது அதானியோ, பாஜகவோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இந்த முறை அமெரிக்க அரசாங்கத்தின் துறையே அதானி மீது கடுமையான பொருளாதார முறைகேட்டுப் புகார்களை பதிவு செய்திருக்கிறது.
அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறுவதற்காக பத்திரங்கள் மோசடி செய்திருப்பதாக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் ஏழு பேர் மீது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அறிவித்தது.
அமெரிக்காவில் பில்லியன் கணக்கான டாலர்களை திரட்டுவதற்காக முதலீட்டாளர்களுக்கும் வங்கிகளுக்கும் பொய் சொல்லியும், அந்த நிதியின் மூலம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கைமாறியதும் நடந்திருப்பதாக அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதித்துறையின் குற்றவியல் பிரிவின் துணை உதவி அட்டர்னி ஜெனரல் லிசா எச் மில்லர் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வஸ்டிகேஷன் அமைப்பின் உதவி இயக்குநர் ஜேம்ஸ் இ டென்னி இருவரும் இணைந்து நீதிமன்றத்தில் அதானி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க பொருளாதார சட்டங்களின்படி நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் மிக மிக முக்கியமானவை. அவை மீறப்பட்டதாக தெரியவந்தால், அதிபரே ஆனாலும் சட்டத்தின் முன் நின்றாக வேண்டும். இந்த பின்னணியில்தான், அதானி குழுமம் அமெரிக்காவில் இருந்து நிதி திரட்டி அதை வைத்து இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவில் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கௌதம் எஸ். அதானி, சாகர் ஆர். அதானி மற்றும் வினீத் எஸ். ஜெய்ன் ஆகியோர் திட்டமிட்டார்கள் என்பதுதான் அமெரிக்க எஃப்.பி.ஐ.யின் அதிரடி குற்றச்சாட்டு.
இந்த புகார் தொடர்பாக அனைத்து விவரங்களையும் திரட்டி, நீதிமன்றத்தில் அதானி மீது குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்து விட்டது எஃப்.பி.ஐ.
காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி இன்னமும் அதானியை பாதுகாத்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
பாஜகவினரோ, ‘இந்த விவகாரத்தில் ஜார்க்கண்ட் , ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் மின்சார வாரியங்கள்தான் அமெரிக்க எஃப். பி.ஐ.யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. அந்த மாநிலங்களில ஆட்சி செய்தவை பாஜகவுக்கு எதிரான அரசியல் அணியில் இருக்கும் கட்சிகள்தான் ‘ என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க பொருளாதார சட்டங்களின்படி நம்பிக்கையை மீறுதல் என்பது மிகவும் மோசமான குற்றமாகும். எஃப்.பி.ஐ. சார்பில் அதானி நிறுவனம் யார் யாருக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அக்கு வேறு ஆணி வேறாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். indictment எனப்படுகிற குற்றப் பத்திரிகையில் பெயர் குறிப்பிடாத நபர்கள் என்று பட்டியலிடப்பட்டிருந்தாலும்… அதானி நிறுவனம் யார் யாருக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற பெயர்ப்பட்டியலை நீதிபதியிடம் தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்ற விசாரணையின்போது இதெல்லாம் தெரியவரும் என்கிறார்கள்.
ஜார்க்கண்ட், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் யார் யாருக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தது., அவர்களை எப்படி அதானி தரப்பினர் பார்த்தார்கள், எந்த வகையில் எவ்வளவு லஞ்சம் கொடுத்தனர் என்பதையெல்லாம் அமெரிக்க உளவுத்துறையினர் இஞ்ச் பை இஞ்ச் ஆக தகவல் சேகரித்து எஃப்.பி.ஐ.க்குக் கொடுத்திருக்கிறார்கள். வழக்கு விசாரணையின் போது இவை பெரும் குண்டுகளாக வெடிக்கும் என்கிறார்கள்.
தமிழக எதிர்க்கட்சியினரும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக இதை பெரும் ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘கடந்த ஜூலை மாதம் அதானியை தமிழக முதல்வர் சந்தித்ததாக தகவல்கள் வந்ததே… அதுபற்றி முதல்வர் விளக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘தமிழக அரசு மத்திய அரசின் நிறுவனத்தோடுதான் சூரிய மின்சாரம் தொடர்பாக தொடர்புகொண்டுள்ளதே தவிர, அதானி நிறுவனத்தோடு அல்ல’ என்று கூறியிருக்கிறார்.
இதேநேரம் அதானியோ இந்த தீவிரமான குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வது எப்படி என்ற தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
அதானி முன் இருக்கும் ஒரே வழி, நியூயார்க் நீதிமன்றத்தில் இருக்கும் இவ்வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதுதான். அதற்காக இந்தியாவின் சிபிஐயின் உதவியை அவர் நாடியிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது, அமெரிக்க நீதிமன்றத்தில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான சிபிஐ, ‘ அதானி மீதான புகார்களின் ஆவணங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று கோரி மனு தாக்கல் செய்யலாம். அப்படி செய்யும் பட்சத்தில் வழக்கின் விசாரணையை தள்ளிப்போடும்படி செய்யலாம். ஆனால் அதானிக்காக அவ்வளவு ஓப்பனாக மோடி களமிறங்குவது நடக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்… அதிர்ச்சித் தகவல்கள்!
Foreign Official #1 என்று அமெரிக்க போலீசார் குறிப்பிட்டது யாரை? அதானியால் அலறும் ஆந்திரா
Comments are closed.