தமிழ் சினிமாவில் சில ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களால் என்றென்றும் நினைவுகூரப்படும். அந்த சண்டைக்காட்சிகளுக்கு முந்தைய சில நிகழ்வுகள் இன்னும் முக்கியம்.
நாயகனோ, அவரைச் சார்ந்தவர்களோ செயல்படும் விதம், அவர்களது உடல்மொழி, பேசும் வசனம் என்று ஏதோ ஒன்று அத்திரைப்படத்தை ரசிகர்களின் மனதில் இருந்து அழிக்க முடியாத படைப்பாக ஆக்கிவிடும்.
‘பாட்ஷா’வில் தண்ணீர் பம்பை ரஜினி பிடுங்கி எடுக்கும் காட்சி, ‘ரன்’னில் சப்வே ஷட்டரை மாதவன் மூடும் காட்சி, ‘துப்பாக்கி’யில் புகை மூட்டத்திற்கு நடுவே விஜய் தோன்றும் ஷாட், ‘ஆனந்தம்’ படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், ஷ்யாம் கணேஷ் நால்வரும் வேட்டியை மடித்துக் கட்டும் ஷாட் என்று அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப அந்த பட்டியல் நீளும்.
அந்த வரிசையில் இடம்பெறத்தக்க ஒரு சண்டைக்காட்சியைக் கொண்டது ‘உறியடி’. விஜயகுமார் நடித்து இயக்கிய இப்படத்தில் இடைவேளைக்கு முன்னதாக வரும் ‘தாபா’ சண்டைக்காட்சியை ரசிகர்களால் மறக்க முடியாது. அதனை வடிவமைத்தவர் சண்டைப்பயிற்சியாளர் விக்கி.
அது மட்டுமல்லாமல், ஒரு படமாகவும் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருந்தது ‘உறியடி’.
சாதீய அரசியல்!
நான்கு இளைஞர்கள். ஒரு பெருநகரமொன்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கின்றனர்.
வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனிக்காமல் இருப்பது, மாணவிகளைச் சீண்டுவது, சீனியர்களிடம் பணிந்து போவது, கல்லூரி விடுதிக்கு அருகேயுள்ள ஒரு தாபாவில் மது அருந்துவது, எந்த இலக்குகளும் இல்லாமல் வாழ்வின் அந்த கணங்களில் வாழ்வது என்றிருக்கின்றனர்.
அவர்களது வாழ்வைப் புரட்டிப் போடுகிறது சிலரது சாதீய அரசியல்.
தங்களது சாதிச் சங்கத்தைத் தவறாகப் பேசிவிட்டார்கள் என்று அந்த மாணவர்களோடு ஊரில் இருக்கும் சிலர் சண்டையிட்டுத் தகராறில் ஈடுபடுகின்றனர். தாபாவின் உரிமையாளரும் அந்த சாதிச்சங்கத்தில் பொறுப்பு வகிப்பவர் தான்.
சாதிச் சங்கம் மற்றும் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலைப் பயன்படுத்தி, அப்போது நடக்கும் தேர்தலில் அவர் வாக்குகளை அள்ள நினைக்கிறார். அதே நேரத்தில், அவருக்கு நெருக்கமான ஒரு வணிகரின் மகன் தனிப்பட்ட பகை காரணமாக அந்த மாணவர்களைக் கொல்லத் துடிக்கிறார்.
இரு வேறு தாக்குதல்களுக்கு நடுவே, அந்த மாணவர்கள் என்னவானார்கள்? பெரிய பின்புலம் இல்லாத அவர்களால் அந்த சாதீய அரசியலை எதிர்கொள்ள முடிந்ததா என்று சொன்னது ‘உறியடி’.
குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் நடிப்புக் கலைஞர்கள் குறைவு. திரையில் பிரமாண்டத்தைக் காட்ட வழி இல்லை. பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் பணியாற்றவில்லை.
அனைத்தையும் மீறி, சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது ‘உறியடி’. அதன் காட்சியாக்கம் வித்தியாசமான அனுபவமொன்றை ரசிகர்களுக்குத் தந்தது. அதுவே, எட்டாண்டுகள் கழித்தும் அப்படத்தை நாம் நினைவுகூரக் காரணமாக உள்ளது.
வித்தியாசமான அனுபவம்!
இந்த படத்தில் நான்கு நண்பர்களாக விஜய்குமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் நடித்திருந்தனர்.
ராமநாதன் என்ற பாத்திரத்தில் நடித்த சுருளி, தாபா உரிமையாளராக வரும் மைம் கோபி, அவரது தாய்மாமனாகவும் சாதிச்சங்கத் தலைவராகவும் வந்த சிட்டிசன் சிவகுமார், தாபாவில் பணியாற்றுபவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், விஜய்குமாரின் ஜோடியாக நடித்த ஹென்னா பெல்லா உட்பட அனைவருமே சாதாரண மனிதர்களாகத் திரையில் தெரிந்தனர்.
பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு, அபிநவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பு, விக்கியின் ஆக்ஷன் கொரியோகிராஃபி, பாலனின் கலை வடிவமைப்பு, விஜய்குமாரின் பின்னணி இசை, பாடல்களுக்கு இசையமைத்த மசாலா காபி, ஆண்டனி தாசன் மற்றும் விஷால் சந்திரசேகரின் பங்களிப்பு என்று எல்லாமுமாக இணைந்து இப்படத்தைச் செறிவானதாக மாற்றியது.
மரங்களே இல்லாத பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பொறியியல் கல்லூரி, நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளடங்கிக் காணப்படும் தாபா, சாதிச்சங்கத் தலைவர் வாழும் பழமையான வீடு என்று காட்சிகளுக்கான களங்கள் நம்மை தொண்ணூறுகளின் இறுதிப்பகுதிக்கு அழைத்துச் செல்வதாக இருந்தன.
மாணவிகள் குறைவாக உள்ள ‘உலோகவியல் பொறியியல்’ பிரிவைப் படத்தில் காட்டியிருந்தார் இயக்குனர். அது சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையில் புதிதாகத் தெரிந்தன.
மாணவர்களும் மாணவிகளும் ஒரு சாதாரண கல்லூரியில் இருப்பது போலவே படத்திலும் தெரிந்தனர். முக்கியமாக, மாணவர்களோடு மோதும் சாதீயப் பற்றாளர்களாக நடித்தவர்கள் யதார்த்தத்தைப் பிரதிபலித்திருந்தனர். அது போன்ற அம்சங்களே, ‘உறியடி’ தந்த வித்தியாசமான காட்சியனுபவத்தின் பின்னால் இருந்தன.
தாமதமான வெற்றி!
2016ஆம் ஆண்டு மே 27ஆம் தேதியன்று வெளியானது ‘உறியடி’. பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத இப்படம், மெதுவாக ரசிகர்களின் பாராட்டுதல்களால், சமூகவலைதள பதிவுகளால் வெளியே தெரியத் தொடங்கியது. ‘உறியடி ஒரு நல்ல படம்’ என்று தெரிய வருவதற்குள் தியேட்டர்களை விட்டு அகன்றுவிட்டது.
படம் வெளியாகிச் சரியாக ஓராண்டு கழித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார் அப்படத்தை இயக்கி நடித்து தயாரித்திருந்த விஜயகுமார். அதில், இப்படத்தை உருவாக்குவதற்காக கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் செலவழித்ததாகவும், அதற்காகத் தான் பார்த்து வந்த வெளிநாட்டு வேலை, சேமிப்பு, உறவினர்களின் பணத்தை முதலீடு செய்ததாகவும் கூறியிருந்தார்.
சாதீய அரசியலைப் பேசிய ஒரு காரணத்திற்காக, பலர் இப்படத்தை வெளியிட முன்வரவில்லை என்றிருந்தார் விஜய்குமார்.
தியேட்டரில் வெளியாகி 35 நாட்களைக் கடந்த ‘உறியடி’, பிறகு பலரது மொபைல், லேப்டாப்களில் பல நாட்கள் ஓடியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். டெண்ட்கொட்டா எனும் வெளிநாட்டு கட்டணப் பார்வை தளத்தில் அதிகளவில் ‘உறியடி’யை ரசிகர்கள் கண்டு களித்த விவரம் தெரிய வந்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
பிறகு, 2019இல் ‘உறியடி 2’ படத்தை வேறொரு பின்னணியில் தந்தார் விஜயகுமார். கடந்த ஆண்டு அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் ‘பைட் கிளப்’ நடித்திருந்தார். சமீபத்தில் ‘சேத்துமான்’ தமிழ் இயக்கத்தில் ‘எலக்சன்’ படத்தைத் தந்திருந்தார்.
இடைப்பட்ட காலத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் விஜய்குமார். ஆனாலும், அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது. அவர்கள் இன்றும் ‘உறியடி’யைக் கொண்டாடி வருகின்றனர். அது போன்ற படங்களையே அவரிடத்தில் எதிர்பார்க்கின்றனர்.
‘உறியடி’ என்ற ஒற்றைப் படம் விஜய்குமாருக்குத் தந்த அடையாளம் அது. அந்த வகையில், அந்த படத்திற்குக் கிடைத்த தாமதமான வெற்றியே அதன் இயக்குனருக்கு அழுத்தமான அடையாளமாகவும் மாறியுள்ளது. ‘உறியடி’யை மறந்துவிடாமல், இன்னும் பல வெற்றிப்படங்களை விஜய்குமார் இயக்க வேண்டும்; நடிக்க வேண்டும்.
‘உறியடி’யில் இடம்பெற்று, பிறகு காணாமல்போனவர்களும் தங்கள் வேட்கைக்குத் தக்க இடத்தைத் திரைத்துறையில் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம். வாழ்த்துகள் ‘உறியடி’ டீம்!
உதய் பாடகலிங்கம்