வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை முதல்வர் நினைத்தால் வழங்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று புதுச்சேரியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் மற்றும் தலைவராக மருத்துவர் ராமதாஸ் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம், காசு கொடுத்து கூட்டப்பட்டதல்ல. சொந்தமாக கூடிய கூட்டம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள்தான்.
ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து சமுதாயங்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் போராடுகிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயங்களும் என் பின் வாருங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும் என்றார்.
மேலும் கூட்டணி அமைக்கும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாமக தொண்டர்கள் நினைக்கும் கூட்டணியை அமைப்பேன். நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சிறப்பாக பயன்படுத்துவேன் என்றார்.
10.5 சதவிகித இட ஒதுக்கீடு
வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை முதல்வர் நினைத்தால் வழங்க முடியும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வரை சந்தித்து பேராசிரியர் பாடம் எடுப்பது போல எடுத்தேன். ஆனால் பயன் இல்லை. மத்திய அரசை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி அரசு தட்டிக்கழித்து வருகிறது. அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் நடத்தலாம்.
சில மாநிலங்கள் இதை செய்து காட்டி உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதல்வரை வலியுறுத்துகிறேன். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இது வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு. இதுபோன்ற ஒரு பொதுக்குழுவை பாமக கண்டதில்லை என்றும் தெரிவித்தார்.
