தமிழகத்தில் அனைத்து நகர்புறங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்த திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்டமாக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 5-வது கட்டமாக,
அனைத்து நகரப்புறங்களிலும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட இருக்கிறது. மொத்தம் 2,429 பள்ளிகளில், இத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தால் 3,06,000 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.
காலை உணவு திட்டத்தில் முதல் 3 கட்டங்கள், 30,992 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு 15.32 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். 4-வது திட்டத்தில் மட்டும் 3,995 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு 2.21 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
5-வது கட்டமாக நகர்ப்புற பள்ளிகளில் இன்று முதல் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க சென்னை வருகை தந்த பகவந்த் மானை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்றார்.
