2023ல் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகள் தேர்வு 2023-ன் எழுத்துப் பகுதி மற்றும் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்களின் அடிப்படையில், நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதி வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி, மத்தியப் பணிகள், குழு ‘ஏ’ மற்றும் குழு ‘பி’ பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது.
இதற்கு 10,16,850 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,92,141 பேர் முதல்நிலை தேர்வு எழுதினர்.
இவர்களில் 14,624 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2,855 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள்.
இவர்களில் 1016 பேர் தற்போது இறுதி செய்யப்பட்டு தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் லக்னோவைச் சேர்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்த்வா முதலிடத்தை பிடித்துள்ளார். ஐஐடி கான்பூர் பட்டதாரியான இவர், பெங்களூருவில் goldman sachs என்ற நிறுவனத்தில் ரூ.2.5 லட்சம் மாத ஊதியத்தில் பணியில் இருந்தார்.
தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரான அவர், தற்போது இந்தியளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ரூ.2.5 லட்சம் ஊதியத்தை விட்டுவிட்டு இந்த குடிமை பணி எழுதியது ஏன் என ஆதித்யா ஸ்ரீவஸ்த்வாவிடம் நேர்காணலின் போது கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கு அவர், “இந்த சமூகம் மிகவும் மதிப்புமிக்கது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக பணிபுரிந்தவர் யார் என்பது யாருக்கும் நினைவில் இல்லை, ஆனால் டி.என். சேஷன் யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என பதிலளித்தார்.
டி.என். சேஷன் டிசம்பர் 15, 1932 அன்று கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று 1955ம் ஆண்டு பேட்ச் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். .
1990-96வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த இவர் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகளை கொண்டு வந்தவர்.
இவரைதான் தற்போது யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் வந்த ஆதித்யா நினைவுகூர்ந்து நேர்காணலில் கூறியுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் புவனேஷ் ராம் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2016 முதல் குடிமை பணிக்காக தேர்வு எழுதி வந்த புவனேஷ் ராம் 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில், 496ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.
தற்போது 41ஆவது இடத்தை பிடித்து குடிமை பணிக்கு தேர்வாகியுள்ளார்.
அதுபோன்று அகில இந்திய அளவில் 78 ஆவது இடத்தை பிடித்துள்ளார் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரசாந்த்.
தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், 2022ஆம் ஆண்டு தான் மருத்துவ இளங்கலை படிப்பை முடித்தார்.
2022 ஜூன் மாதம் 36 தங்கப் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுடன் சிறந்த மருத்துவராக பட்டம் பெற்றார் பிரசாந்த்.
அப்போது ஐஏஎஸ் ஆக வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கனவு என்று பிரஷாந்த் கூறியிருந்தார்.
அதன்படி ஒரே வருட முயற்சியில் குடிமை பணிக்கு தேர்வாகியுள்ளார் பிரசாந்த்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அனிதாவின் ‘பருத்திக் கோட்டை’ ஆபரேஷன்… அதிர்ச்சியில் நயினார்
மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை?