upi transactions regulations changes
யுபிஐயின் பயன்பாட்டை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய விதிமுறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் யுபிஐ செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும், தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
யுபிஐ பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் என பல்வேறு செயலிகள் நடைமுறையில் இருக்கின்றன.
கடந்த 2022-2023 ஆண்டில் மட்டும் யுபிஐ செயலியை பயன்படுத்தி, 8 ஆயிரத்து 375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இந்த நிலையில் யுபிஐ பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்திருந்தது. அந்த நடைமுறைகள் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
*யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி உச்சவரம்பு தற்போது ரூபாய் 1 லட்சமாக உள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பினை ரூபாய் 5 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

*ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் முதன்முறையாக யுபிஐ மூலம் ரூபாய் 2000 அல்லது அதற்கும் மேல் செய்யப்படும் முதல் பண பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக பணம் அனுப்பியது தெரிந்தால் உங்களால் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
*ஜப்பானின் ஹிட்டாச்சியுடன் இணைந்து ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்களை திறக்கவுள்ளது. உங்கள் மொபைலில் இருந்து யுபிஐ கியூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தினை எடுக்கலாம்.
*ஒரு வருடத்துக்கும் மேலாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை உடனே செயலிழக்கச் செய்ய வேண்டுமென கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளுக்கும், வங்கிகளுக்கும் இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) அறிவுறுத்தியுள்ளது.
*ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகள் (பிபிஐ) மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆனால் இந்த பரிமாற்ற கட்டணம் பொதுமக்களுக்கு அல்ல வணிக பரிமாற்றங்களுக்கு மட்டுமே என என்பிசிஐ அறிவித்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனையில் விரைவில் டேப் அண்ட் பே முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என என்பிசிஐ அறிவித்துள்ளது. இதன் மூலம் விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
அதானி குழும விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சிக்கலில் தனுஷ், எஸ்.கே: தமிழ் படங்களை வெளியிட கடும் கட்டுபாடு!
upi transactions regulations changes
