நரிவேட்டை படத்தை பாராட்டி எழுதியதற்காக அடித்தேன் என தனது மேனேஜர் விபின் குமார் கூறிய குற்றச்சாட்டை நடிகர் உன்னிமுகுந்தன் மறுத்துள்ளார். unni mukundan denied that he attacked vipin kumar
மலையாள நடிகர் டொவினோ தாமஸ், இயக்குநர் சேரன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நரிவேட்டை.
இப்படம் கடந்த 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. பலரும் தங்களது விமர்சனத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள திரையுலகில் பிரபல நடிகரான உன்னி முகுந்தனின் மேனேஜர் விபின் குமார், நரி வேட்டை படத்தை பாராட்டி தனது முகநூல் பக்கத்தில் கடந்த 22ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

எனினும் டொவினோ தாமஸின் படத்தை பாராட்டியது பிடிக்காமல், விரக்தியில் தன்னை உடல்ரீதியாக உன்னி முகுந்தன் தாக்கியதாவும், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் அவரது மேனேஜர் விபின்குமார் கொச்சி இன்ஃபோ பார்க் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
உன்னி சமீபகாலமாக விரக்தியில் உள்ளார்!
அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “நான் நடிகர் உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். மார்கோ திரைப்படத்துக்குப் பின் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை.
அவரது சமீபத்திய படமான கெட்-செட் பேபி பாக்ஸ் ஆபிஸில் தோல்வி, உன்னி இயக்க இருந்த படத்தில் இருந்து ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் சமீப காலமாக விரக்தியில் உள்ளார்.
நான் 18 ஆண்டுகளாகத் திரைத்துறையில் திரைப்பட புரமோஷன் ஆலோசகராகவும் இருக்கிறேன். பல படங்களுக்கு மக்கள் தொடர்பு பணிகளையும் செய்திருக்கிறேன். அப்படி, புரமோஷனுக்காக டொவினோ தாமஸின் நரிவேட்டை படத்தைப் பாராட்டி முகநூலில் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்த உன்னி முகுந்தன், என்னை அழைத்து இனிமேல் நீ எனக்கு மேலாளராக இருக்க வேண்டாம் என்றார். மேலும், என்னை நேரில் அழைத்துத் தாக்கியதுடம் கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டினார். அதற்காகவே காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்” என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதனையடுத்து உன்னி முகுந்தனுக்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்க தொடங்கினர்.

விபின் குமார் என் மேலாளர் இல்லை!
இந்த நிலையில் மனோரமா ஆன்லைனுக்கு இன்று அளித்த பேட்டியில் நடிகர் உன்னி முகுந்தன் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “விபின் குமாருடன் நீண்ட காலமாக நட்பில் உள்ளேன். அவர் எனது படங்களின் விளம்பரத்திற்கு உதவிய ஒரு PRO மட்டுமே. மேலாளர் இல்லை. மற்ற நடிகர்களைப் போலவே எனது படத்திற்கும் விளம்பரத்திற்கு பணியாற்றினார். கடந்த பத்தாண்டுகளில் என்னிடம் பணியாற்றிய ஒரே ஊழியர் எனது மேக்கப் மேன் மட்டுமே. அவர் எனக்கு எதிராக இதுவரை புகார் அளித்ததில்லை. நான் சினிமாவைப் பற்றி மட்டுமே கனவு காண்பவன், அதில் உண்மையாக இருக்க பாடுபடுகிறேன்.
தற்போது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் விபின் செயல்பட்டு வந்தார். மேப்படியான் படத்தின் இயக்குனர் விஷ்ணு மோகன் இதுபற்றி விபினிடம் கேட்டபோது, அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
பின்னர், விஷ்ணுவே எனக்கு போன் செய்து, பிரச்சினையைத் தீர்க்க விபினை நேரடியாகச் சந்திக்குமாறு பரிந்துரைத்தார். அந்த காரணத்திற்காக விபின் குமாரின் கொச்சி பிளாட்டுக்கு நான் சென்றேன். அங்கிருந்த பார்க்கிங் ஏரியாவில் அவரை சந்தித்து, ’ஏன் என்னைப் பற்றி மற்றவர்களிடம் மோசமாகப் பேசுகிறீர்கள்?’ என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை, பதட்டமாகவும், அதிர்ச்சியாகவும் தோன்றினார்.
மேலும் விபின் குமார் கண்களைப் பார்த்து பேசாததால் ஏற்பட்ட கோபத்தில் நான் அவரது சன்கிளாஸைக் கழற்றி உடைத்தேன் – அது உண்மைதான். ஆனால் உடல் ரீதியான தாக்குதல் என்று அழைக்கப்படும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடவில்லை.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.
என்னுடன் நெருக்கமாக இருந்த ஒருவர், எனக்கெதிராகவே திரும்புவதைப் பார்ப்பது அதிர்ச்சியையும் வலியையும் தருகிறது. அதனை விளக்க முடியாது” என்றார்.

எங்கள் நட்பை அழிக்க முடியாது!
மேலும் அவர், “இது எனக்கும் டோவினோவுக்கும் மோதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சாரம். இதுதொடர்பாக நான் டோவினோவை நேரில் அழைத்து எல்லாவற்றையும் விளக்கினேன். அவர் நிலைமையைப் புரிந்துகொண்டார்.
நாங்கள் தொழில்துறையில் நுழைந்ததிலிருந்து இருவரும் நண்பர்களாக இருக்கிறோம், வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறோம். டோவினோ என்னுடன் மார்கோவின் வெற்றியைக் கொண்டாடியவர். எந்த பொய்யான வதந்தியும் எங்கள் நட்பை அழிக்க முடியாது” என உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.