உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கர், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்தார்.
இந்த வழக்கில் குல்தீப் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தசூழலில் செங்கர் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த டிசம்பர் 23ஆம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. பாதிக்கப்பட்ட சிறுமி காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (CBI) மற்றும் சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று (டிசம்பர் 29) விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், செங்கர் ஜாமீனில் விடுவிக்கப்பட மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் சட்டரீதியான பல கேள்விகள் உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் நீதிபதிகள், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(2)(i)-ன் கீழ் உள்ள தண்டனையை உயர் நீதிமன்றம் ஆராய்ந்ததா என்பது குறித்து கவலை எழுகிறது.
சிறந்த நீதிபதிகளும் கூட தவறுகளுக்கு ஆளாகக்கூடியவர்கள். நீதித்துறை ஆய்வு அமைப்பின் ஒரு பகுதி” என்று கூறி குல்தீப் செங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
