menstruation leave Smriti Irani reply
மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் நாட்களில் பெண்கள் பலரும் ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வலியை அனுபவிக்கிறார்கள். இதனால் அவர்கள் சாதாரண வேலையை செய்ய கூட சிரமப்படுவார்கள்.
இந்த நிலையில் குறிப்பிட்ட 2 அல்லது 3 நாட்களுக்குப் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
ஸ்பெயின், இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிப்பது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன.
இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கின்றன என்றாலும் இது தொடர்பாக இந்திய அரசு கொள்கை ரீதியான முடிவு எதையும் எடுக்கவில்லை.
இந்த சூழலில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் குமார் ஜா, எழுப்பிய கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,
“அனைத்து பணியிடங்களிலும் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 13) மாநிலங்களவையில் அளித்த பதிலில், “மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். சிறப்பு விடுப்பு தேவைப்படும் அளவுக்கு மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு அல்ல.
மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு அதுகுறித்த குறிப்பிட்ட கண்ணோட்டம் இருக்கிறது. பெண்களுக்குச் சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்வைக்கக் கூடாது.
இருப்பினும், மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தேசிய வரைவு கொள்கை உருவாக்கப்படும். இது நாடு முழுவதும் முறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை நடைமுறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது” என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
10-19 வயதுடைய இளம்பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் பல முயற்சிகளை அரசாங்கம் கொண்டுள்ளது என்றும், பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா என்ற மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் விற்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதன்முறையாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் பிகார் மாநிலம் மாதவிடாய் விடுமுறை கொள்கையைக் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மாதவிடாய் விடுமுறை குறித்த பதில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்துக்கே முழு அதிகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்!
இரண்டாவது ஆபரேஷன்… துரை தயாநிதி கோமாவில் இருக்கிறாரா? – மெடிக்கல் ரிப்போர்ட்!
menstruation leave Smriti Irani reply