விமான விபத்து : “அவசர முடிவுகளுக்கு வர வேண்டாம்” : மத்திய அமைச்சர் கோரிக்கை!

Published On:

| By christopher

union minister request to media on air india accident

விமானிகளின் உரையாடலை அடிப்படையாகக் கொண்டு ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அவசர முடிவுக்கு வரவேண்டாம் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். union minister request to media on air india accident

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 அடுத்த சில நொடிகளில் விபத்தில் சிக்கியது. இதில் 241 பயணிகள் உட்பட 275 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. அதில் மேற்கொண்ட தொடர் ஆய்வின் படி, 15 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) இன்று சமர்ப்பித்தது.

அதில், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட மூன்று வினாடிகளில், ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின் இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.

ADVERTISEMENT

மேலும் விமானம் கிளம்பிய அடுத்த நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிவாயு ‘RUN’-ல் இருந்து ‘CUTOFF’-க்கு சென்றுள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவில், ஒரு விமானி இன்னொரு விமானியிடம், ‘ஏன் அதை கட் ஆஃப் செய்தீர்கள்?’ என்று கேட்கிறார். அதற்கு இன்னொருவர், ‘நான் செய்யவில்லை’ என்று கூறியது பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டியில், ”சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து வருகிறது. அவசரப்பட்டு எந்த முடிவுகளுக்கும் வர வேண்டாம். இறுதி அறிக்கை வெளியான பிறகுதான், ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியும்.

விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் இந்த விசாரணை சவாலானது, பல தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. அறிக்கை குறித்து தற்போது கருத்து தெரிவிப்பது முன்கூட்டியே சொல்வதாக இருக்கும் என்றும் கூறினார்.

விமானிகளும் பணியாளர்களும் விமானத் துறையின் முதுகெலும்பு. உலகிலேயே விமானிகள் மற்றும் பணியாளர்களைப் பொறுத்தவரை நம்மிடம் மிக அற்புதமானவர்கள்” என்று ராம் மோகன் கூறினார்.

அதே போன்று மத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் (MoS) முரளிதர் மொஹோல் கூறுகையில், “AAIB எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணைகளை நடத்துகிறது. நாங்கள் கருப்புப் பெட்டியை வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை… அது நம் சொந்த நாட்டிலேயே டிகோட் செய்யப்பட்டது. விமானியின் உரையாடலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது, ஏனெனில் இது மிகவும் சுருக்கமான பரிமாற்றம்” என்று மொஹோல் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share