கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள்- மத்திய அரசு விளக்கம்!

Published On:

| By Minnambalam Desk

Keeladi

கீழடி அகழாய்வு அறிக்கை சர்ச்சை தொடர்பாக மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. Union Government Clarifies on Keeladi Excavation Findings

மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களின் ஒரு பகுதியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரைக்கு எதிராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட ஊடகம் செய்தியாக உடனடியாக வெளியிடலாம்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.

கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.

ஊடகங்களின் ஒரு பகுதியில் பரப்பப்படும் செய்தி தவறாக வழிநடத்துகிறது. இது உண்மைக்குப் புறம்பானது மற்றும் முற்றிலும், கடுமையாக மறுக்கப்படுகிறது. ஒரு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share