Union Budget 2026: மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றம் – தங்கம் தென்னரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

மத்திய நிதியமைச்சர் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்த பட்ஜெட் மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு ஏமாற்றம் தந்திருக்கிறது என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து  தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பதிவில், “2026 ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது.

மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே.”என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மத்திய பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில், “2026 – 27ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒன்பதாவது முறையாக வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியே!
இந்தியாவை 2047இல் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார்.
இது வரை பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.
புவிசார் பதற்றங்கள், வர்த்தக நெருக்கடிகள், அமெரிக்க வரி கொள்கைகள் போன்றவை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்த காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அவற்றை எதிர்கொள்கின்ற வகையில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்தால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு தீர்வாக ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டு 2027 ஏப்ரல் மாதம் தான் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமெரிக்க வரி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதற்கான விடை இல்லை.
வளர்ச்சியை ஊக்குவிக்க முன்மொழியப்படும் 6 துறைகள் என கூறப்பட்டிருப்பது புதிது அல்ல. முந்தைய நிதிநிலை அறிக்கைகளிலும் இடம்பெற்றவையே.

ADVERTISEMENT

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 11.7  லட்சம் கோடி கடன் வாங்கும் நிலையில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு எப்படி நடை போடும்? பாஜக அரசின் 12 ஆண்டு காலத்தில் பணவீக்க விகிதம் நிலையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
மாநிலங்களுக்கு 16 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி பகிர்வு 41 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் மூலம் நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்ச அணுகுமுறை தொடர்கிறது.

உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி தொழில்துறை சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
வாகன உற்பத்தி தொழில் துறைக்கான வரி உயர்வு என்பது வாகன உற்பத்தி கேந்திரமான தமிழ்நாட்டிற்கு இழப்பாகும்.
நாட்டின் ஜவுளித் துறையில் அதிக பங்களிப்பை அளிக்கும் தமிழ்நாட்டின் திருப்பூர் ,கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவுளித் தொழில் துறையினருக்கு நிதிநிலை அறிக்கை ஊக்கமளிக்கவில்லை.
வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வும் இல்லை.

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. மேலும் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு வெறும் 10 ஆயிரம் கோடி என்பது சொற்ப தொகையே.
சென்னை – பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது வருந்தத்தக்கது.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை. கல்வி, சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது, வாகன விபத்து இழப்பீட்டிற்கான வரி விலக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு, ஏழு அரிய வகை நோய்களுக்கு மருந்து இறக்குமதி வரி குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க கூறுகள் இருந்தாலும், ஒன்றிய வரவு செலவுத் திட்ட அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை; ஏமாற்றத்தையே தருகிறது.”என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பட்ஜெட் குறித்து ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் பதிவில், கடந்த முறை ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது அது பீகார் நிதிநிலை அறிக்கை போல இருந்தது. அடுத்த சில மாதங்களில் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்தது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதுகுறித்த அறிகுறிகூட இன்றைய நிதிநிலை அறிக்கையில் இல்லை. தேர்தலுக்காகக் கூட தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்கள் எதையும் அறிவிக்க மோடி அரசு முன்வரவில்லை. இந்த மாநிலங்களில் பாஜகவிற்கு வெற்றி சாத்தியமில்லை என்பதை பாஜக உணர்ந்தே இருக்கிறது.

நாட்டில் வேலை வாய்ப்பின்மை,விலைவாசி உயர்வு,விவசாயம்,சிறு,குறு நடுத்தர தொழில்களின் நலிவு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு ( இன்றைய பிரதமரின் வயதை விட அதிகமாக உள்ளது!) உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் எவ்வித தொலைநோக்குத் திட்டங்களோ, பெரிய மாறுதல்களை ஏற்படுத்தக் கூடிய சிந்தனைகளோ இல்லை.

பெண்களுக்கு மாவட்டந்தோறும் விடுதி என்று அறிவிப்பு வரவேற்புக்குரியது. இதை தமிழ்நாடு அரசு தோழி விடுதி என்ற பெயரில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் ,ஒடிசா மாநிலங்களின் இயற்கை வளங்களைக் குறிவைத்து அரிய வகை கனிம காரிடார் அறிவிக்கப்பட்டுள்ளதை மிக எச்சரிக்கையோடு அணுக வேண்டியுள்ளது.

மொத்தத்தில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கக்கூடியது” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share