அஸ்தியை கரைப்பது போல வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் – எடப்பாடி குற்றச்சாட்டு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Ungaludan Stalin Petitions on Vaigai River

அஸ்தியை கரைப்பது போல வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள் கொட்டப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களின் பெயர் திருத்தங்கள், பட்டா சிட்டா, உள்ளிட்டது தொடர்பான மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்து வருகின்றனர். இதில் மகளிர் உரிமை தொகைக்கான மனுக்கள் அதிக அளவில் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெற்றப்பட்ட மனுக்கள் மிதப்பதை கண்டு பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆற்றில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனங்கள். எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கறுப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.

ADVERTISEMENT

நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவங்கங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது

மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அதிமுகவின் சமூக வலைத்தள பக்கத்தில், “பொதுமக்கள் அளித்த மனுக்களை தூக்கி எறிந்த திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்.” என கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share