ஆற்றில் கிடந்த உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் : உடனே ஆய்வுக்கூட்டத்தை கூட்டிய உதயநிதி

Published On:

| By Kavi

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) இத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தியுள்ளார்.

மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் திட்டத்தை அறிவித்து கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

ஜூலை முதல் நவம்பர் வரை 10000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு மாவட்டம் மாவட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் மானாமதுரை, தேவகோட்டை, சாக்கோட்டை, சிவகங்கை, திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல்முடிக்கரை ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT

இப்படி பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டுள்ளது. ஆற்றில் மனுக்கள் மிதக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி விளக்கமளித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் ஆற்றில் வீசப்பட்டது குறித்து  சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகப் பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றது தெரியவந்தது.

கடந்த இரண்டு தினங்களாக திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியர் மூலம் புகாரும் அளிக்கப்பட்டது.

அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது, உரியச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இன்று (ஆகஸ்ட் 29) தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டத்தை கூட்டினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “அரசுத்துறை சேவைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்திட, முதல்வர் உங்களுடன் ஸ்டாலின்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அவை குறித்து அரசு உயர் அதிகாரிகள் – மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்புடனான ஆய்வுக்கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.

ஒவ்வொரு மனுவுக்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் மகிழும் வண்ணம் அவற்றிற்கு தீர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share