ADVERTISEMENT

நிதீஷ் குமார் தலைமையில் என்.டி.ஏ-வின் முந்தைய சாதனைகளை முறியடிப்போம் : மோடி

Published On:

| By Kavi

முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பீகாரில் ஆட்சிக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பீகாரில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இதையொட்டி பிரதமர் மோடி இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். 

சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, ‘ வரும் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பான்மையை பெறுவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தல் சாதனைகளை கண்டிப்பாக முறியடிக்கும்’என்று கூறினார். 

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளை தாக்கி பேசிய மோடி, ஆர்ஜேடி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளன. அக்கட்சிகளின் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர். 

பீகாரில் நிதீஷ் குமாரின் அரசாங்கத்திற்கு ஆர்ஜேடி – காங்கிரஸ் ஆகியவை தடைகளை உருவாக்கியது. ஆனால் நிதிஷ்குமார் மாநிலத்தை சகதியிலிருந்து மீட்டு சரியான பாதையில் எடுத்துச் சென்றுள்ளார். பீகார் இப்போது என்டிஏ ஆட்சியின் கீழ் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 

ADVERTISEMENT

மீண்டும் காட்டாட்சிக்கும், விளக்கு யுகத்திற்கும் செல்ல மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 

அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மக்களை ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி தவறாக வழி நடத்துகிறது. 

மக்களின் நீண்ட கால கோரிக்கையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது தேசிய ஜனநாயக கூட்டணி தான். அதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் தான் எஸ்சி/ எஸ் டி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் பீகாரருக்கு மூன்று மடங்கு நிதியை ஒதுக்கி இருக்கிறது. 

பீகாரில் ஆர்ஜடி – காங்கிரஸ் ஆட்சியில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் பீகாரில் 18க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே பயந்தனர். ஆனால் என்டிஏ ஆட்சியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக பீகாரில் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.  நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்று தேஜஸ்வி தெரிவித்திருந்தார். 

இந்த சூழலில் நிதீஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அதன் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்று மோடி கூறி இருப்பதன் மூலம் மீண்டும் முதல்வராக என்டிஏ கூட்டணியில் நிதீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share