பீனிக்ஸ் பறவையாக 3வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதிப்பாரா பி.வி.சிந்து?

Published On:

| By Kavi

PV Sindhu: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் வரும் ஜூலை 26 அன்று பிரம்மாண்ட துவக்க விழாவுடன் கோலாகலமாக துவங்கவுள்ளது.

32 வகையான விளையாட்டுகள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க 112 பேர் கொண்ட அணியுடன் இந்தியா பாரிஸ் செல்கிறது.

1900 பாரிஸ் ஒலிம்பிக் துவங்கி தற்போது வரை பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளில், அதிகபட்சமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் இந்திய அணி அதிகபட்சமாக 1 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளது.

இம்முறை அதற்கும் அதிகமான பதக்கங்களை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அதில் ஒரு பதக்கம் பி.வி.சிந்துவிடம் இருந்து வரும் என்ற எதிர்பார்ப்பும் விளையாட்டு ரசிகர்களிடையே உள்ளது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை வென்ற பி.வி.சிந்து, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி, கடைசி 2 ஒலிம்பிக் தொடர்களில் இந்தியாவுக்காக ஒரு பதக்கத்தை வென்று கொடுத்தார்.

இந்நிலையில், “நான் பாரிஸ் ஒலிம்பிக்கில் முழு மூச்சுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்ற போராடுவேன்”, என கடந்த 2 முறை தவறவிட்ட ஜொலிக்கும் வண்ணம் கொண்ட பதக்கத்தை இம்முறை வெற்றி மாலையாக சூடுவேன் என பி.வி.சிந்து உறுதியேற்றுள்ளார். “இந்த முறை எனது 200% உழைப்பை நான் வழங்குவேன்”, என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

“2016 மற்றும் 2020 ஒலிம்பிக் தொடரில் எனது பயணம் அற்புதமாக இருந்தது. பல மறக்க முடியாத தருணங்களை கொண்டிருந்தது. தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வெல்வது என்பது சாதாரணமானது அல்ல. எனது அனைத்து கவனமும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற புள்ளியில் தான் உள்ளது. இம்முறையும் எனது தேசத்தை நான் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்”, என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

2 ஒலிம்பிக் பதக்கங்கள் மட்டுமின்றி, இதுவரை ஒரு தங்கம் உட்பட 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றுள்ள பி.வி.சிந்துவுக்கு கடந்த சில மாதங்கள் சிறப்பானதாக அமைந்திடவில்லை. கடந்த 2023 ஆக்டோபரில் காயம் காரணமாக பேட்மின்டனில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றிருந்த பி.வி.சிந்துவுக்கு, அதன் பிறகு விளையாடிய அனைத்து தொடர்களும் சோதனை நிறைந்ததாகவே இருந்ததது.

ஆனால், பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து, இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் தங்கத்தை கழுத்தில் ஏந்துவார் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது.

அதேபோல, ஆண்கள் இரட்டையர் பிரிவில் பேட்மின்டன் உலகை கலக்கி வரும் சாத்விக் – சிராக் இணை இம்முறை இந்தியாவுக்காக ஒரு பதக்கத்தை உறுதி செய்யும் என்ற எதிர்பார்ப்பும் விளையாட்டு ரசிகர்களிடம் நிறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய், லக்ஷயா சென், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிராஸ்டா என துடிப்பான வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளதால், இம்முறை சில பதக்கங்கள் பேட்மின்டனில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுதியாகவே உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

மகாராஜா படத்தை பாராட்டிய விஜய் : நிதிலன் நெகிழ்ச்சி ட்வீட்!

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. முக்கியமான 2 வீரர்கள் இல்லையே..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share