இந்தியாவில் மற்ற தொகுதிகளுக்கு ஒரு எம்.பி. என்றால் வயநாட்டுக்கு மட்டும் இரண்டு எம்.பி என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் வயநாட்டில் போட்டியிடும் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (அக்டோபர் 23) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்காக வயநாடு முன்னாள் எம்.பி.ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பேரணியாக சென்றனர். இதன் தொடர்ச்சியாக, கல்பெட்டாவில் பிரம்மாண்ட மாநாடு நடந்தது.
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “வயநாடு எனக்கு செய்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை செயலில் தான் காட்ட வேண்டும்.
நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் வயநாட்டிற்கு மட்டும் இரு எம்.பி.கள் இருப்பார்கள். பிரியங்கா காந்தி அதிகாரப்பூர்வ எம்.பி.யாக இருப்பார். நான் அதிகாரப்பூர்வமற்ற எம்பியாக இருப்பேன். இருவருமே வயநாடு மக்களுக்காக பாடுபடுவோம்.
வயநாடு மக்களுக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். பிரியங்கா காந்தி பேசும்போது, நீங்கள் என்னை பாதுகாத்தீர்கள், கவனித்துக்கொண்டீர்கள் என்று கூறினார்.
அதுபோல என் சகோதரியையும் கவனித்து அவரைப் பாதுகாக்குமாறு வயநாடு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நான் கட்டியிருக்கும் ராக்கி கயிறு பிரியங்கா கட்டியது. அதுவாக அறுந்து விழும் வரை நான் அதை எதுவும் செய்யமாட்டேன். இது ஒருவகையில் ஒரு அண்ணன், தனது சகோதரியை பாதுகாக்கும் முறையாகும்.
இதைதான் நான் வயநாட்டு மக்களிடம் கேட்கிறேன். அவரை நீங்கள் ஆதரித்து பாதுகாக்க வேண்டும்.
அதுபோன்று வயநாட்டு மக்களுக்காக தனது முழு ஆற்றலையும் செலுத்தி பிரியங்கா உங்களை பாதுகாப்பார். அவர் எப்போதும் தனது குடும்பத்துக்காகவும், நண்பர்களுக்காகவும் எதையும் தியாகம் செய்வார்.
தற்போது வயநாடுதான் பிரியங்காவின் குடும்பம். நானும் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
வைத்திலிங்கம் வழக்கு… சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!