விருதுநகர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 9) மாலை புதிய பேருந்து நிலையம் முதல் எம்.ஜி.ஆர் சிலை வரை ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்தார்.
கோவை மாவட்டத்தை தொடர்ந்து கள ஆய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 9) விருதுநகர் சென்றார். கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சூலக்கரை மேட்டில் உள்ள மாற்றுத்திறன் மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி மற்றும் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம். தங்கும் வசதிகள். அவர்களது கல்வி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து கல்வி தான் யாராலும் அழிக்க முடியாத செல்வம் அதனால் கல்வியை தடையின்றி நன்முறையில் கற்று சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, மாணவிகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தார். அப்போது முதல்வரை வாழ்த்தி பேசிய மாணவி ஒருவர், நீங்கள் எங்களது பெற்றோர் அதாவது அப்பா மாதிரி என்று கூற சிரித்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “அப்பா…” நிறைவான நாள் என்று பதிவிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எம்ஜிஆர் சிலை வழியாக ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் மண்டபம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணியாக சென்று ரோடு ஷோ நடத்தினார்.
சாலையில் இரு புறங்களிலும் திரண்டிருந்த தொண்டர்களும், மக்களும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். சிலர் கோரிக்கை மனுவோடு நின்றுகொண்டிருந்தனர். அதையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
இந்த ரோடுஷோவின் போது ஒரு தம்பதியினர் தங்களது குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் அந்த குழந்தைக்கு செம்மொழி என பெயர் வைத்து கையில் 500 ரூபாய் கொடுத்து வாழ்த்தினார்.
நாளை புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
டூவிலர் திருட்டுக்கு எஃப்.ஐ.ஆர். போடலையா? இனி அப்படி கிடையாது!
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி : யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?