கோத்தபய பதவி விலகல்: இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

Uncategorized

இலங்கையின் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்‌சே பதவி விலகியதும், இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாச தேர்ந்தெடுக்கப்படுவார் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி அறிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டில் உணவு, எரிபொருள் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் உள்ளது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ராஜபக்‌சே தலைமையிலான ஆளும் அரசை எதிர்த்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். முன்னதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌சே பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் மீண்டும் வெடித்தது. அவர்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு கைப்பற்றினர். அதிபர் கோத்தபய அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதுடன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த பிரதமர் மற்றும் அதிபர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வரும் 20ம் தேதி வாக்கெடுப்பு நடத்தி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், தப்பியோடிய அதிபர் கோத்தபய கையொப்பமிட்ட பதவி விலகல் கடிதம் நாளை (ஜூலை 13) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் அடுத்த இடைக்கால அதிபராக சஜித் பிரேமதசா நியமிக்கப்படுவார் என அவரது கட்சியான எஸ்.ஜே.பி அறிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் வெற்றிபெற 113 எம்.பி.களின் ஆதரவு தேவை. 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட எஸ்.ஜே.பி கட்சி மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவைப் பெற்று இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து எஸ்.ஜே.பி கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைக்கால அதிபராக சஜித் பிரேமதசாவை ஒருமனதாக நியமிக்கும் கோரிக்கையை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்ததாகவும், அதனை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள சஜித் பிரேமதசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”இலங்கையில் தற்போது குழப்பமான நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க திட்டம் உள்ளது. அதனை செயல்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை 2019 ஆம் ஆண்டு நிலைக்குத் திரும்பச் செய்ய சுமார் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். நாங்கள் மக்களை ஏமாற்றப் போவதில்லை. வெளிப்படையாக இருந்து இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்போம். இதற்கு நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் ஒற்றுமை அவசியம்.” என்று கூறி உள்ளார்.

– கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *