தென்னிந்திய சினிமாவின் மெல்லிசை அரசி என அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி பி.சுசீலா ஆவார். குறிப்பாக இந்தியா துணைக் கண்டத்திலேயே, அதிக பாடல்களை பாடிய பாடகி இவர்தான். 9 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.
இந்த பெருமை மிகுந்த சாதனை கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் இடம் பெற்றுள்ளது. உலகசாதனை படைத்த பாடகி சுசீலா ஐந்து முறை மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெறுள்ளார்.
கலைத்துறையில் சிறப்பான தொண்டாற்றியதாக சுசீலாவுக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் விருதும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பி.சுசீலா முடி காணிக்கை செலுத்தினார்
அப்போது நாராயண மந்திரம் என்ற பக்தி பாடல் பாடி திருப்பதி ஏழுமலையானை வணங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் இவர் முடி காணிக்கை செய்த புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது.
தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள பி.சுசீலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடகி பி.சுசீலா மிகவும் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்ததால், குடும்பத்தினர் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சுசீலாவின் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
யுபிஎஸ்சி பணியிட அறிவிப்பில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு : திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!